அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மொத்தம் 28.4 கோடி ரூபாய் செலுத்தி வாங்கியிருப்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சரிந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் இம்முறை அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மினி ஏலத்திற்கு முன்னரே சஞ்சு சாம்சனை வாங்கி பேட்டிங்கை பலப்படுத்திய சிஎஸ்கே அணி, ஐபிஎல் மினி ஏலத்தில் 40.4 கோடி ரூபாய் கையிருப்புடன் பங்கேற்றது.
இந்த ஏலத்தில் அன்கேப்டு இந்திய வீரர்களான கார்த்திக் சர்மா (Kartik Sharma) மற்றும் பிரசாந்த் வீர் (Prashant Veer) ஆகிய இருவரையும் சேர்த்து 28.4 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகை கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மேலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் (Rahul Chahar) ஐ 5.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் அகீல் ஹுசேன் (Akeal Hosein) ஐ அவருடைய அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய்க்கும், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி (Matt Henry) ஐ அவருடைய அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான மேத்யூ ஷார்ட் (Matthew Short) ஐ 1.50 கோடி ரூபாய்க்கும், நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாக் ஃபௌல்க்ஸ் (Zak Foulkes) மற்றும் இந்திய பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் (Sarfaraz Khan) ஆகிய இருவரையும் தலா 75 லட்சம் ரூபாய்க்கும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மேலும், இந்திய ஆல்ரவுண்டரான அமன் கான் (Aman Khan) ஐ 40 லட்சம் ரூபாய்க்கும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.








