சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகம் 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய களஞ்சியம் நூலகங்களிலும் ஒன்றான இந்த நூலகம், இந்தோ–சாரசனிக் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகம், இந்தியாவில் உள்ள நான்கு தேசிய களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் வெளியீடுகளுக்கான களஞ்சிய நூலகமாகவும் திகழ்கிறது.
பழமையும் பெருமையும் மிக்க இந்த கன்னிமாரா பொது நூலகம், ரூ.4 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, இளைய தலைமுறையினரை ஈர்க்கும் அறிவுச் சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.
நூலக வளாகத்தில், அறிவியல் பூங்கா, குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான தனிப்பட்ட வாசிப்பு வசதிகள், தங்களது சொந்த புத்தகங்களை கொண்டு வந்து படிக்க விரும்புவோருக்கான பிரத்தியேக வாசிப்பு பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கைரோஸ்கோப், பெரிய அளவிலான தனிம அட்டவணை, மனித உடற்கூறியலை கற்பிக்கும் தொடுதிரை உள்ளிட்ட STEM செயல்பாடுகளுடன் கூடிய சுவாரசியமான அறிவியல் பூங்காவாக நூலகம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
புத்தகப் பிரிவுகளில் கண்ணுக்கு இனிமையான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் பூங்காவில், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை குழந்தைகள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தங்களது உச்சரிப்பு சரியாக உள்ளதா என்பதை சுயமாக சரிபார்த்துக்கொள்ளும் வசதியும், புதிர்களைத் தீர்க்கும் செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. மனித உடற்கூறியல் கண்காட்சி குழந்தைகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறிவியல் பூங்கா மிகவும் சிறப்பாக உள்ளது. VR வசதிகள், மனித உடல் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது
புதிய மாநாட்டு அரங்கம், புதிய மின்தூக்கி, மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள் ஆகிய வசதிகளும் நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள பாரம்பரிய பிரிவில், அரசு ஆவணங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகள் மற்றும் நிலவரி பதிவேடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை ஆராய்ச்சி அறிஞர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், குழந்தைகள் எளிதாக புரிந்துகொள்ளும் முறையில் நூலகம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
அறிவியல், கணிதம், ஆங்கில பேச்சுத் திறன் உள்ளிட்ட துறைகளில் குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகளின் வாசிப்பு திறனும், அறிவியல் மனப்பான்மையும் வளர்க்கப்படுகிறது.
புதிய STEM பிரிவு, பெரிய மரங்கள் மற்றும் கிரானைட் இருக்கைகளுடன் கூடிய அமைதியான வளாகம் ஆகியவை சிந்தனைக்கும் அறிவுசார் விவாதங்களுக்கும் ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளன. இதனால் கற்றல், கண்டுபிடிப்பு மற்றும் அறிவுசார் வளர்ச்சியின் மையமாக கன்னிமாரா பொது நூலகம் மாறியுள்ளது.
“ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்ற கருத்தினைப் போலவே, கன்னிமாரா பொது நூலகம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியமாக திகழ்கிறது.
உலகமெங்கும் தேடி பெறக்கூடிய அறிவுச் செல்வத்தைவிட, நம் கையில் இருக்கும் ஒரு புத்தகம் தரும் அறிவு மிகப் பெருமதிப்புடையது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த புதுப்பிப்பு பணிகள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.








