Home தமிழகம் “41 உயிர்கள்… சிபிஐ விசாரணை… விஜய்க்கு நெருங்கும் சமன்?”

“41 உயிர்கள்… சிபிஐ விசாரணை… விஜய்க்கு நெருங்கும் சமன்?”

கரூரில் நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகள் புசி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது நாளாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜயிடமும் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான சமன் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை டெல்லியா அல்லது சென்னையிலா நடைபெறும் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பங்கேற்றபோது ஏற்பட்ட தாமதம், அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல், பேருந்து விபத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணை இரண்டாவது நாளாகவும் தொடரும் என நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

முக்கிய தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக தவெக தலைவர் நடிகர் விஜயிடமும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐயின் இரண்டாம் கட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், நடிகர் விஜயும் தற்போது சிபிஐ விசாரணை வலயத்தில் உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.