Home தமிழகம் “மாஞ்சோலை தோட்டங்களில் 50 குடும்பங்கள் அதிர்ச்சியில் – ஏழு நாட்களில் வெளியேற நோட்டீஸ்”

“மாஞ்சோலை தோட்டங்களில் 50 குடும்பங்கள் அதிர்ச்சியில் – ஏழு நாட்களில் வெளியேற நோட்டீஸ்”

அதிகாலை பொழுதில் கண்கொள்ளும் காட்சியும் பறவைகளின் சத்தமும் காதுகளுக்கு இனிமையைக் கொடுத்து வந்தன. இந்த காட்சிகள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என ஏங்கி நின்ற மக்களுக்கு இடியை இறக்கியது தேயிலை தோட்ட நிர்வாகம்.

இனிவரும் நாட்களை மாஞ்சோலையில் கழித்துவிட நினைத்த மக்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. மாஞ்சோலை தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஏழு நாட்கள் காலத்துக்குள் வெளியேறவேண்டும் எனக் கூறப்பட்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தேயிலை பயிரிட்டு உற்பத்தி செய்வதற்காக பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து அந்த நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது.

கடந்த 1929ஆம் ஆண்டு தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவி நடத்தப்பட்டன. இந்நிலையில், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான வனப்பகுதிகளை அரசு தன்வசமாக்கியது.

அதன்பிறகு அரசு புதிதாக நிர்ணயித்த குத்தகை பணத்தை தேயிலை தோட்ட நிர்வாகத்துக்கு கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதற்கு மறுப்பு தெரிவித்த தேயிலை தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே இடத்தை காலி செய்து தருவதாகக் கூறிய தேயிலை தோட்ட நிர்வாகம், 2025ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு மற்றும் கருணை தொகை வழங்கி வெளியேற நோட்டீஸ் அனுப்பியது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு மற்றும் கருணை தொகையைப் பெற்றுக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 2028ஆம் ஆண்டு வரை குடியிருப்புகளை காலி செய்ய முடியாது என்றும், நிரந்தரமாக அந்த பகுதியில் குடியிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அங்கு வசிக்கும் குடியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், தோட்ட பகுதியில் குடியிருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்குள் அதில் தொடர்புடைய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன்பிறகு செவ்வாய்க்கிழமை, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் தேயிலை தோட்டங்களுக்கு நேரில் சென்று தொழிலாளர்களின் தேவைகள் குறித்து விசாரித்தார். இந்நிலையில், நேற்று காலை தேயிலை தோட்டங்களில் குடியிருப்பவர்களின் வீடுகளில் பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன் சார்பில், குடியிருப்புகளை ஏழு நாட்களுக்குள் காலி செய்யவேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நோட்டீஸில் தேயிலை தோட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், பங்களாக்கள், பணியாளர் குடியிருப்புகள், தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் பிற கட்டிடங்கள் அடங்கிய நிலங்களை 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31க்குள் ஒப்படைக்க முடியாதால், தற்போது உடனடியாக அந்த பகுதிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், தோட்ட வளாகத்தில் வசித்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் உடமைகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி காலி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உயர் நீதிமன்றம் அடிப்படை வசதிகள் செய்ய உத்தரவிட்ட நிலையில், தேயிலை தோட்ட நிர்வாகம் ஏழு நாட்களுக்குள் இடத்தை காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கியிருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.