Home தமிழகம் அண்ணாமலையின் அக்னி பயணம் இன்று தொடங்கியது

அண்ணாமலையின் அக்னி பயணம் இன்று தொடங்கியது

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்த ஆண்டு 21ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை சுமார் 6.30 மணி அளவில், அண்ணாமலையார் கோவில் கருவரையின் முன்பாக உள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீப கொடியேற்றம் மிக விமர்சையாக நடைபெற்றது.

இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள், காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாட வீதி ஊர்வலத்தில் எழுந்தருளவுள்ளனர். கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடி உயர்த்தப்பட்டது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதுடன், சமக துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இன்று காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதி ஊர்வலங்கள் நடைபெறும்.

அடுத்த 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் இறுதிநாள் வரும் டிசம்பர் 3. அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர அண்ணாமலையார் மலையின் சிகரத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். அதே நாளில் அதிகாலையில் கோவிலுக்குள் பழனீ தீபமும் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலையின்மேல் மகாதீபம் ஏற்றப்படும்.

இந்த ஒரே நிகழ்வைக் காண மட்டும் திருவண்ணாமலைக்கு 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 15,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.