சென்னை முகப்பேர் பகுதியில், காதுக்குள் யாரோ அழைப்பது போல ஒலி கேட்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஐடி ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். காதுக்குள் ஏதோ ஒலி கேட்பதாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி, தனது தாய்‑தந்தை மன்னிக்குமாறு குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார். நேற்று அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி திருப்பதிக்கு சென்றிருந்த நிலையில், ரோஷன் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல ஒலி கேட்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சகோதரரிடம் ஏற்பட்ட முன்கூட்டிய கருத்து வேறுபாடுகளுக்காக மன்னிப்பு கேட்டும், தாய்‑தந்தைகள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையிலும், அவரது குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








