சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையை இனி சென்னை மாநகராட்சியே பராமரிக்கும் என சிட்கோ அறிவித்துள்ளது. தெற்காசியாவின் மிகப்பெரிய தொழில்பேட்டையாக விளங்கும் சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையை இதுவரை அம்பத்தூர் தொழில்பேட்டை கூட்டமைப்பினர் பராமரித்து வந்தனர்.
அவர்கள் 128 சாலைகள், 1800 மின்விளக்குகள், 2000 கழிவுநீர் கால்வாய்கள், தினமும் சுமார் 40 டன் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இனி அம்பத்தூர் தொழிற்சாலைகள் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், அம்பத்தூர் தொழில்பேட்டையை இனி சென்னை மாநகராட்சியே முழுமையாக பராமரிக்கும் என்றும் அம்பத்தூர் தொழில்பேட்டை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
“2004 ஆம் ஆண்டு முதல் அம்பத்தூர் தொழில்பேட்டை கூட்டமைப்பே இந்தப் பகுதியை பராமரித்து வருகிறது. சிட்கோவின் உதவியுடனும், சிவா நிறுவனத்தின் ஆதரவுடனும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதன் ஒரு பகுதியாக, 1800 தெருவிளக்குகள் பராமரிப்பு, 128 சாலைகள் சீரமைப்பு, 2000 கழிவுநீர் குழாய்கள் பராமரிப்பு, சுமார் 82 கிலோமீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைப்புகள், 1500 செக் பிட்டுகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தினமும் சுமார் 40 டன் குப்பை வீடு வீடாக சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வந்தது.
தற்போது இந்த பராமரிப்பு பணிகளை சென்னை மாநகராட்சிக்கு சிட்கோ ஒப்படைத்துள்ளது. மாநகராட்சி சிறப்பாக பராமரிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர்கள் இந்த பணிகளை திறம்பட மேற்கொள்வார்கள்” என தெரிவித்தனர்.








