Home தமிழகம் “அத்திவரதர் கோவிலில் அதிர்ச்சி! தங்க, வெள்ளி பல்லி மாயம்

“அத்திவரதர் கோவிலில் அதிர்ச்சி! தங்க, வெள்ளி பல்லி மாயம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி மாயம் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி மாயமானதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த திருக்கோவில் “அத்திவரதர் கோவில்” என்றும், “தேவராஜ சுவாமி திருக்கோவில்” என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில், சுவாமிகளை தரிசிப்பதை விட, தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி சிலைகளை தரிசிக்க அதிகமான பக்தர்கள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

தினமும் காஞ்சிபுரம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, இந்த தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லியை தரிசிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி சிலைகளில் சூரியன், சந்திரன் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தினமும் அந்த சிலைகளைத் தடவி வழிபடுவதால், அவை சேதமடைந்திருந்தன. இதனால், அந்த பகுதியை புனரமைப்பதற்காக சிலைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டன.

இந்த நிலையிலே, பழைய தங்க மற்றும் வெள்ளிப் பல்லி சிலைகளை மாற்றி, புதிய சிலைகளை அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற நபர், பழைய தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி சிலைகள் காணாமல் போயுள்ளன என்றும், புதிய சிலைகளை அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றும் கூறி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றனர். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஜி.எஸ்.பி. சம்பத் தலைமையில் ஆறு போலீசார் கொண்ட குழு கோவில் வளாகத்துக்குள் சென்று, சிலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களை முழுமையாக ஆய்வு செய்தனர்.

பின்னர், கோவில் பட்டாச்சாரியர்கள், ஸ்தானிகர்கள், கோவில் மனைக்காரர் மற்றும் நிர்வாக அரங்காவலர், உதவி ஆணையர் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் சுமார் 13 கேள்விகள் எழுப்பி, பதில்களைப் பெற்று பதிவுசெய்தனர். மேலும் விசாரணைக்காக உதவி ஆணையர் ராஜலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை காரணமாக, காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.