Home தமிழகம் ”சைக்கோ கணவரின் ரணகளம்! பெண்ணை சித்திரவதை செய்த கொடூரம் வெளிச்சம்”

”சைக்கோ கணவரின் ரணகளம்! பெண்ணை சித்திரவதை செய்த கொடூரம் வெளிச்சம்”

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெயிண்டிங் கான்ட்ராக்டர் தனது 24 வயது மகளுக்கு திருமண தகவல் மையம் மூலம் வரன் பார்த்து வந்தார். இந்த நிலையில், பைனான்ஸ் தொழில் செய்து வரும் புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த 33 வயது அகஸ்டின் ஜோஷுவா என்பவருடன் பெண் வீட்டாருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு இரு குடும்பங்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 23ஆம் தேதி அகஸ்டின் ஜோஷுவாவுக்கும் 24 வயது பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து, புதுமணப் பெண் தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.

முதல் இரவின் போது, “முதலில் நாமிருவரும் பழகிப் புரிந்து கொள்வோம்; அதுவரை தாம்பத்தியம் வேண்டாம்” என்று புதுமணப் பெண் கணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மறுநாள் இரவும் கணவன்–மனைவிக்கு இடையே இதே விஷயத்தைச் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்.

இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அகஸ்டின் ஜோஷுவா, வீட்டில் இருந்த சுத்தியலால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர், அவரை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. பயந்துபோன அந்தப் பெண், தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தார்.

இதைக் கேட்ட சகோதரி உடனே அந்த வீட்டிற்கு சென்று, கைகளில் மற்றும் உள்ளங்கால்களில் இரத்தக்கட்டு, முகத்தில் காயம் போன்ற கடுமையான சித்திரவதைக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது சகோதரியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனை நிர்வாகம் வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, புதுப்பெண்ணிடம் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டனர். திருமணம் ஆன இரண்டு நாட்களிலேயே கணவன் மனைவியை சுத்தியலால் தாக்கி கொடுமைப்படுத்தியதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அகஸ்டின் ஜோஷுவாவை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் முன்பு இரண்டு பெண்களுடன் ‘லிவிங் டுகெதர்’ வாழ்ந்ததாகவும், அவர்களையும் இதேபோல் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து திருமணம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

போலீசாரிடம் பேசிய அகஸ்டின் ஜோஷுவா, “திருமணத்தின் போதும் எனக்கு உரிய மரியாதை தரவில்லை; தாம்பத்தியத்திலும் இரண்டு நாட்களும் என்னை அணுக விடவில்லை; அதனால் ஆத்திரத்தில் தவறு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் அவர்மீது சிறை வைத்தல், ஆபாசமாக திட்டுதல், ஆயுதத்தால் தாக்குதல், கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜோஷுவாவை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான மனிதர் உண்மையில் சைக்கோவாக இருந்ததை அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர். “எதுவும் தெரியாமல் ஆசையாய் வளர்த்த மகளை இப்படிப்பட்ட மனிதரிடம் திருமணம் செய்து வைத்துவிட்டோமே” என்று வருத்தப்பட்ட அவர்கள், இனி அவளைக் இவர் அருகில் வாழ விடப் போவதில்லை என்ற முடிவில், புதுமணப் பெண்ணை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.