சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை தினமும் 35 லட்சம் பேர் பயன்படுத்துவதாகவும், காற்று மாசைக் குறைக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடுதல், ஒப்பந்தம் செய்தல், தனியார் பங்களிப்பை உரிய வகையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பொது போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சிறப்பான சேவை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பதாகவும் உலக வங்கி பாராட்டியுள்ளது.
விடியல் பயணம், பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் ₹2000 வரை சேமிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100% டிக்கெட் முறையும், GPS, டிராக்கிங், சென்னை ஒன் செயலி உள்ளிட்ட வசதிகளின் மூலம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முழுமையாக டிஜிட்டல் முறையில் இயங்கி வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மாறியுள்ளதாகவும், இலவச பேருந்து பயணங்கள் வழங்குவதோடு, பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த சாதனை, சென்னை மாநகரம் பெருமை கொள்ளத்தக்க ஒரு அங்கீகாரம் என்றும் உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.








