ஜனவரி முதல் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்தி தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளில் கோழிக்கறி கிடைக்காத நிலையை உருவாக்க போவதாக கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனையாளர்களிடமும் கறிக்கோழி பிரியர்களிடமும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வரவிருக்கும் தேர்தல் நேரத்தில் சிக்கன் பிரியாணிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்களின் எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 7 அன்று சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் சிலர் கறிக்கோழி பண்ணைக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பண்ணை உரிமையாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப்பதற்கு வழங்கப்படும் கூலியை ரூபாய் 6.50 லிருந்து ரூபாய் 15ஆக உயர்த்த வேண்டும். 2013ல் அரசு அளித்த வாக்குறுதியின் படி பண்ணை உரிமையாளர்கள் நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து வளர்ப்பு கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆனால் இதுவரை அத்தகைய பேச்சு வார்த்தை யும் நடத்தப்படவில்லை என பண்ணை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் முன்பு ஆண்டுக்கு ஆறு முறை கோழிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மூன்று முறை மட்டுமே கிடைப்பதால் வருவாய் குறைந்து கடன்களை அடைக்க முடியாமல் தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள 40ஆயிரம் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்களையும் ஒருங்கிணைத்து ஜனவரி முதல் உற்பத்தியை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இதன் விளைவாக தேர்தல் சமயத்தில் சிக்கன்பிரியாணிக்கு சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
பண்ணை உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு அரசுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தி உள்ளதுடன் கறிக்கோழி சந்தையில் ஒரு நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கி உள்ளது.








