Home தமிழகம் ”சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் இரட்டை கடத்தல்… நான்கு பேர் கைது!

”சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் இரட்டை கடத்தல்… நான்கு பேர் கைது!

துபாயிலிருந்து இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா பயண விசாவில் துபாய் சென்று விட்டு, இந்த விமானத்தில் இந்தியா திரும்பினார். அவர்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் தனது உள்ளாடைக்குள் மூன்று உருளைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை திறந்து பார்த்தபோது, 24 கேரட் சுத்தமான தங்கப் பசை 940 கிராம் இருந்தது தெரிய வந்தது.

இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 1.36 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கத்தை கடத்த முயன்ற அந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ஒரு கடத்தல் குருவி என்றும், அவர் கொண்டு வந்த தங்கத்தை வாங்கிச் செல்ல கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் காத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விமான நிலையத்தின் வெளியே சென்று அங்கு நின்றிருந்த சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமிகள் இருவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே, துபாய்க்கு செல்லவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது இளம் பெண் பயணி ஒருவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் கையில் எடுத்துச் செல்ல வைத்திருந்த பெரிய பையை சோதனை செய்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பெண் பயணியின் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவரது பையில் இருந்த வெளிநாட்டு பணத்தை எண்ணிப் பார்த்ததில், மொத்தம் ரூபாய் 2.73 கோடி மதிப்புள்ள கடத்தல் பணம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணம் பரிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் பயணியும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், இந்த இளம்பெண் கூட கடத்தல் குருவி என்றும், இந்த பணத்தை யாரோ ஒருவர் கொடுத்து அனுப்பியதாகவும் தெரிய வந்தது.

எனவே, இந்த பணம் கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஹவாலா பணத்தை ரகசியமாக வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற மர்ம ஆசாமிகள் யார் என்பதையும் கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில்,
ரூபாய் 1.36 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூபாய் 2.73 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் என மொத்தம் சுமார் ரூபாய் 4.09 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, இளம்பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.