கரூர் கூட்டநெரிசல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இது தொடர்பான விசாரணையும் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய் பிரச்சார வாகனத்தின் ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில்தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில்,
நேற்று கரூரில், உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர், கரூர் வேலுச்சாபுரம் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து தடயவியல் துறை அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சம்மன் வழங்கியிருந்தனர். இந்த நிலையில், சிபிஐ விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.








