Home தமிழகம் “கவின்–சுபாஷினி உறவுக்காக மிரட்டிய ஜெயபால் – கொலை வழக்கில் அதிரடி தகவல்”

“கவின்–சுபாஷினி உறவுக்காக மிரட்டிய ஜெயபால் – கொலை வழக்கில் அதிரடி தகவல்”

கடந்த ஜூலை 27 மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயபால் கொலை நடப்பதற்கு முன்பே கவினை மிரட்டியது அம்பலமாகி உள்ளது.

ஜெயபாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது சிபிசிஐடி தரப்பில் இந்த அதிர்ச்சி தகவல் எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவரான ஜெயபால் .

ஜெயபால் கவினின் காதலி சுபாஷினியுடனான உறவை துண்டிக்குமாறு கவினை மிரட்டி உள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறை இந்த தகவலை எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தெரிவித்தது.

ஜெயபாலின் ஜாமீன் மனு நீதிபதி எஸ். ஹேமா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயபாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் சாட்சிகளை கலைக்கவும் விசாரணைக்கு தடையாகவும் இருக்கக்கூடும் என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

கொலை செய்வதற்கு முன்பே கவினுக்கும் ஜெயபாலின் உறவினரான சுபாஷினிக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் ஜெயப்பாலுக்கு தெரிய வந்தது. இதை அடுத்து இவர்கள் இருவரையும் கயத்தாருக்கு அழைத்து சுபாஷினியுடனான உறவை முறித்து கொள்ளுமாறு கவினை ஜெயப்பால் மிரட்டி உள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி 25 அன்று கவினுடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசி உள்ளதும் அழைப்பு விவர பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜெயபாலின் ஈடுபாடு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மற்றும் ஏற்கனவே கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரின் வாக்கு மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிபிசிஐடி தரப்பில் ஜூலை 27 அன்று கவின் கொலை செய்யப்பட்ட பிறகு முக்கிய குற்றவாளியான சுர்ஜித் தப்பிச் செல்ல ஜெயபால் உதவி உள்ளார். சுர்ஜித்தின் இரத்தக்கரை படிந்த ஆடைகளை எரிப்பதற்கும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை மாற்றுவதற்கும் ஜெயபால் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித் தாயார் எஸ். கிருஷ்ணகுமாரி என்பவர் இன்னும் தலைமறைவே உள்ளார் என்று சிபிசிஐடி நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. இந்த நிலையில் கவின் குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி பி மோகன் வாதிடுகையில் எஸ்சி எஸ்டிவன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இது ஆதிக்க சாதியினரின் தலையீடு உள்ள ஒரு முக்கிய வழக்கு. உள்ளூர் காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இத்தகைய சூழலில் ஜெயப்பாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் நிச்சயமாக இந்த வழக்கின் விசாரணையை பாதிப்பார் என்று கடுமையாக வாதித்தார். இந்த வழக்கில் வெளியே வராத உண்மையை நோண்டி நொங்கெடுத்து வருகின்றது சிபிசிஐடி