Home தமிழகம் ”பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்! தமிழக அரசின் அதிரடி திட்டம்”

”பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்! தமிழக அரசின் அதிரடி திட்டம்”

தமிழகத்தில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகப்பேறு நிதி உதவி, இலவச தையல் இயந்திரம், தோழி மகளிர் விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, சொந்தமாக தொழில் தொடங்கி சுயசார்புடன் வாழ விரும்பும் பெண்களுக்கென தனிப்பட்ட திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.

அந்த வகையில், பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் ‘வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ மற்றும் ‘தமிழக பெண் தொழில்முனைவோர் அதிகாரமளிக்கும் திட்டம்’ என்ற பெயர்களில் செயல்படுகிறது.

இதன் மூலம், சொந்த தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொது பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டு 45 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் முதலீட்டுத் தொகையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.

மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைவதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், திட்ட அறிக்கை மற்றும் விளம்பர விவரம் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும்.

திரையில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை முழுமையாக்கிய பின் அதன் நகலை தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்குப் பிறகு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்படும். சொந்த தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இந்த திட்டம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.