Home தமிழகம் மதுரை ரெடி! மாட்டுத்தாவணி 2.0 கொண்டு வருது மெகா மாற்றம்

மதுரை ரெடி! மாட்டுத்தாவணி 2.0 கொண்டு வருது மெகா மாற்றம்

தூங்காநகரம் மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். தென் மாவட்டங்களை இணைக்கும் உயிர்நாடியாக விளங்குவது இந்த பேருந்து நிலையம்தான். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலேயே ISO சான்றிதழ் பெற்ற பெருமையுடன் விளங்கிய இந்த பேருந்து நிலையம், காலப்போக்கில் சரியான பராமரிப்பு இல்லாததால் அந்த பெருமையை இழந்தது.

சென்னை கோயம்பேட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெயரை பெற்ற மாட்டுத்தாவணி, கால மாற்றத்திற்கு ஏற்ப மாறாமல் இருந்ததால் மதுரை மக்கள் ஒருவித அதிருப்தியிலேயே இருந்தார்கள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், சமீப காலமாக சென்னை கிளாம்பாக்கம், திருச்சி, சேலம் போன்ற ஊர்களில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் உருவாகியபோது, “மதுரைக்கு மட்டும் ஏன் இந்த நிலை?” என்ற கேள்வி மதுரைக்காரர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ஆனால் இப்போது அந்த கவலைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல், மதுரை மாநகராட்சி ஒரு அதிரடியான மெகா திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பின், மாட்டுத்தாவணியை முழுமையாக மாற்றி அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த பணிகள் இன்று தடாலடியாக தொடங்கியுள்ளன. இனி நீங்கள் பழைய மாட்டுத்தாவணியை பார்க்க முடியாது. ஏனெனில் தற்போது நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட இருக்கின்றன.

முதற்கட்டமாக, பேருந்து நிலையத்தின் பழைய மேற்கூரைகள் முழுமையாக அகற்றப்பட்டு, புதிதாக வட்ட வடிவில் கான்கிரீட் மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன. இது சாதாரண மேற்கூரை அல்ல. தற்போது உள்ள உயரத்தை விட 40 செ.மீ அதிக உயரத்தில் இந்த மேற்கூரைகள் அமைக்கப்பட இருக்கின்றன.

இதனால் பேருந்து நிலையத்திற்குள் காற்றோட்டம் அதிகரிப்பதுடன், ஒரு பிரம்மாண்டமான தோற்றமும் மதுரைக்கு கிடைக்கப் போகிறது. ஆனால் இது வெறும் ஆரம்பம்தான்.

விமான நிலையங்களில் இருப்பதைப் போல அதிநவீன ஹைடெக் கழிப்பறைகள் மாட்டுத்தாவணியில் அமைக்கப்பட உள்ளன. “பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை என்றாலே நாற்றம் வரும்” என்ற கெட்ட பெயரை முற்றிலுமாக ஒழிக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதேபோல், வாகனங்களை நிறுத்துவதில் உள்ள சிக்கலை தீர்க்க ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகளும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளும் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மழைக்காலங்களில் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் தேங்குவது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது. இதை தீர்க்க, சேதமடைந்த கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்கள் முழுமையாக அகற்றப்பட்டு, புதிதாக கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாம் மற்றும் எட்டாம் நடைமேடைகளில் பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பகுதிகளில் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மாட்டுத்தாவணி புதிய பொலிவுடன், மிரட்டலான வசதிகளோடு காட்சி அளிக்கப் போகிறது.

15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நவீன புதுப்பிப்பு பணி, மதுரை மாநகரத்தின் முகத்தையே மாற்றப் போகிறது. கிளாம்பாக்கம், திருச்சி பேருந்து நிலையங்களுக்கு சவால் விடும் அளவுக்கு, மதுரையின் இந்த “மாட்டுத்தாவணி 2.0” உருவாகப் போகிறது.