தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் வங்கியில் வாங்கிய கடனை கட்டாத ஸ்ரீபாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியை நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சீல் வைக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் பள்ளி மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரங்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியான ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. கோபாலகிருஷ்ணன் மற்றும் கோபி ஆகியோர் பள்ளியை நிர்வாகம் செய்து வந்த நிலையில் அவன்ஸ் வங்கியில் வாங்கிய கடனை கட்டவில்லை என கூறப்படுகிறது.
வாங்கிய கடனை கட்டாதது தொடர்பாக வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, இந்த நிலையில் நீதிமன்றம் பள்ளியை சீல் வைத்து சப்தி செய்ய உத்தரவிட்டது.
இதன் பெயரில் வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் ஆணையர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் பள்ளியை சீல் வைக்க வந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து காவல் துறையினர் பள்ளியின் தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காவல் துறையினர் அனைவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி அலுவலக பூட்டை உடைத்து நீதிமன்ற அலுவலர்கள் பள்ளியை சீல் வைக்க முற்பட்டபோது மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் உள்ளிட்டோர் மீண்டும் உள்ளே வந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் சிலர் மாடிமேல் ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர்.
அதை தொடர்ந்து கீழே இறக்கப்பட்டு தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் தங்களின் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது என பெற்றோர்கள் வருத்தம் தெரித்து வருகின்றனர்.








