சார் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க… அப்படின்னு நள்ளிரவு 2.00 மணிக்கு வீடு வீடாக சென்று இளம்பெண் ஒருவர் கதவை தட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அருகே உள்ள ஒருகுடியிருப்புப் பகுதியில், 30 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் வீடு வீடாக சென்று “ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்” எனக் கூறி உதவி கேட்டார். ஆனால் அச்சத்தால் அப்பகுதி மக்கள் யாரும் கதவைத் திறக்கவில்லை.
இந்த சம்பவத்துக்கான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஆங்காங்கு நடைபெறும் கொள்ளை சம்பவங்களை முன்னிட்டு, மக்கள் உதவி செய்யத் தயங்குவது புரிந்துகொள்ளத்தக்கதே என்றாலும், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுகிறது என்று விமர்சித்தனர்.
இந்நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.
காவல் துறையினர் அந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் மெட்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 23 ஆம் தேதி இரவு, அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுடன், அவரது கணவரும் சில உறவினர்களும் தாக்கியதால் உடல் உள் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பருகூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது செல்லும் வழியில் தண்ணீர் தாகம் அதிகரித்ததால், பருகூர் எம்ஜிஆர் நகர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்டுள்ளார். அப்பகுதி மக்கள் யாரும் கதவைத் திறக்காததால், அவர் பருகூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேலும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்திக்குப்பம் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்புவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.








