Home தமிழகம் “சேலத்தில் அரசியல் அதிரடி! விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி”

“சேலத்தில் அரசியல் அதிரடி! விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி”

சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு கூட்டம் வருகின்ற 13ஆம் தேதி சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில், மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவை ஆய்வு செய்த காவல்துறையினர், புதிய அரசாணைப்படி தேவையான திட்டங்கள் இணைக்கப்படவில்லை, பாம்–1, பாம்–2 போன்ற ஆவணங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன எனக் கூறி, அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் 5000 பேருக்குள் மட்டுமே பங்கேற்கும் வகையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவின் மீது காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், தற்போது கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் வருகின்ற 13ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் 5000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேலம் மாநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

5000 பேரைத் தாண்டி கூட்டம் கூடினால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள் என காவல்துறையினர் கேள்வி எழுப்பிய நிலையில், “எங்களிடம் இளைஞர் படை உள்ளது, கூட்டத்தை நாங்கள் முழுமையாக கட்டுப்படுத்திக் கொள்வோம்” என மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் விளக்கம் அளித்துள்ளார்.

காவல்துறையினர் விதித்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், திட்டமிட்டபடி வருகின்ற 13ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், விஜயின் வருகை தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனப் பார்க்கிங் வசதிகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வருவதற்காக தனி பாதை அமைக்கப்படும் என்றும், அதற்கான வழித்தட வரைபடம் (மேப்) காவல்துறையிடம் விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்காக மட்டும் சுமார் 25 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள இந்த 25 ஏக்கர் நிலத்தில் நிறுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டம் நடைபெறும் திடல் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். அந்த பகுதியில் முழுமையாக தடுப்புகள் (பாக்ஸ்கள்) அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பாக்ஸிலும் 250 முதல் 300 பேர் மட்டுமே நிற்கும் வகையில் ஏற்பாடு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளும் அந்த பகுதியில் ஏற்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.