சென்னையின் முக்கியமான பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை விளங்குகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலை நம்பி பயணம் செய்து வரும் நிலையில், சேவையை விரிவுபடுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களில் இயங்கி வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மாதவரம்–சிப்காட், பூந்தமல்லி–லைட் ஹவுஸ், மாதவரம்–சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி–வடபழனி ஆகிய வழித்தடங்கள் அடங்குகின்றன.
இதில் முக்கியமான பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிப்ரவரி மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் இந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆய்வின் போது லிப்ட், எஸ்கலேட்டர் செயல்பாடுகள், அவசரகால வெளியேற்ற வசதிகள், தீவிபத்து நேரத்தில் டிக்கெட் வாயில்கள் தானாக திறக்கும் அமைப்பு, தீ வெளியேறும் வழிகள், நடைமேடை திரை கதவுகள், தகவல் பலகைகள், புகை கண்டுபிடிப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் சோதனை செய்யப்பட உள்ளன.
அதோடு, ரயில் பாதை மற்றும் நடைமேடைகளுக்கு இடையிலான தூரம், தண்டவாளங்களின் நிலை, ரயில் சிக்னல் அமைப்புகள் உள்ளிட்ட கட்டமைப்பு தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வுகள் நிறைவடைந்த பிறகு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பூந்தமல்லி–போரூர் பகுதியில் ஆறு நிமிட இடைவெளியில் 9 முதல் 10 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போரூர்–வடபழனி இடையே ரயில்களின் இடைவெளி பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.
இந்த வழித்தடம் திறக்கப்பட்டால், பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்கு சுமார் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.








