டெல்லியில் நடைபெறவுள்ள சிபிஐ விசாரணைக்காக, தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்திற்கான செலவு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய் மேற்கொள்ளும் பயணங்களில் அவர் பயன்படுத்தும் தனி விமானம் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது.
இந்த விமானங்களை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிளை எஸ்பிஎஸ் (Fly SPS) என்ற நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த விமானம் எம்பிரேயர் லெகசி 600 (Embraer Legacy 600) என்ற ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தை அந்த நிறுவனம் அல்ட்ரா லக்சரி ஜெட் என குறிப்பிடுகிறது. சுமார் 13 பேர் வரை அமரக்கூடிய வசதியுடன் கூடிய இந்த விமானம், ஒரே முறையில் எங்கும் நிறுத்தமின்றி சுமார் 5,556 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. மேலும், இது சுமார் 41,000 அடி உயரத்தில் பறக்கக்கூடியது. இதனாலேயே இந்த விமானம் அல்ட்ரா லக்சரி ஜெட் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, இந்த வகை விமானங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து துறை நிபுணர்கள் தெரிவித்த தகவலின் படி, இந்த அல்ட்ரா லக்சரி ஜெட் பிரிவில் அந்த நிறுவனம் மூன்று முதல் நான்கு வகையான விமானங்களை இயக்கி வருகிறது. இந்த வகை விமானங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ₹2.5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த மணிநேரக் கட்டணத்துக்கு கூடுதலாக, விமானத்தை நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளும் உள்ளன. தற்போது விஜய் சென்னையிலிருந்து டெல்லி சென்று, அதே நாளில் டெல்லியிலிருந்து சென்னை திரும்பும் பயணமாக இருந்தால், மொத்தமாக சுமார் ₹20 லட்சம் வரை செலவாகும் என துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த விமானத்தின் அகலம் (வித்) சுமார் 6 அடி அளவில் இருப்பதாகவும், ஒரே நேரத்தில் 13 பேர் வரை பயணிக்கலாம் என அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.








