தமிழ்நாட்டில் வருகின்ற வாரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 3ஆம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, பிப்ரவரி 4ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், பிப்ரவரி 5ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழ்நாடு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 3ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31°செ. ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°செ. ஆகவும் இருக்கக்கூடும். தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 6 வரை சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால், இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து நாலுமுக்கு பகுதியில் 2 செ.மீ. மழையும், காக்காச்சி, மாஞ்சோலை மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பிப்ரவரி 5ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








