Home தமிழகம் திருமண மண்டபத்திலேயே மாப்பிள்ளை தாக்கப்பட்ட பரபரப்பு

திருமண மண்டபத்திலேயே மாப்பிள்ளை தாக்கப்பட்ட பரபரப்பு

சென்னைக்கு அடுத்த பல்லாவரத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படும் நபருக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள், திருமண மண்டபத்திற்குச் சென்று மாப்பிள்ளை வேஷத்தில் இருந்தவரை சரமாரியாக தாக்கினர்.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்ற நபர், பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் திறமையானவர் என கூறப்படுகிறது. மேலும் ஒரு முன்னணி YouTube சேனலில், பங்குச்சந்தையில் எவ்வாறு பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது என்பதை பற்றி அவர் ஒரு இன்டர்வியூ கூட வழங்கியிருந்தார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவரை தொடர்பு கொண்டு, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பெரிய தொகைகளை வழங்கியுள்ளனர்.

இதன் அடிப்படையில், மோகனப்ரியா என்ற பெண்ணுக்கும் கிளிண்டன் பங்குச்சந்தை முதலீடு செய்வது மற்றும் லாபம் ஈட்டுவது குறித்து கற்றுத்தந்துள்ளார். அவர் பயிற்சி எடுத்துக்கொண்ட காலத்திலேயே இருவருக்குமிடையில் பணம் கொடுக்கல் வாங்கல் அதிகமாக நடந்துள்ளது. மோகனப்ரியாவிடமிருந்து சுமார் 75 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, அதனை முதலீடு செய்ததாக கூறப்பட்டாலும், லாபத் தொகையோ, முதலீட்டுத் தொகையோ திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து கிளிண்டன் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கிளின்டனின் திருமணம் நடைபெற இருப்பதாக, பிரம்மாண்டமான பேனர்கள் வைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதைக் கண்ட, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து, மாப்பிள்ளை வேடத்தில் இருந்த கிளின்டனை இழுத்துச் சென்று தாக்கினர். அவரை அடித்ததோடு மட்டுமின்றி, பல்லாவரம் காவல் நிலையத்தில் முன்பே அளித்த புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், கிளிண்டனை அங்கு அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில், திருமண மண்டபத்திலேயே தன்னை அடித்ததும், அணிந்திருந்த திருமண உடைகளை கிழித்ததும் குறித்து, கிளின்டனும் எதிர்தரப்பினர்மீது சிக்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மொத்தத்தில், மோகனப்ரியாவிடமிருந்து 75 லட்சம் முதல், அதன்பின் மேலும் 75 லட்சம் என மொத்தம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கிளிண்டன் மீது பல்லாவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், கிளிண்டனை தாக்கியவர்கள்மீதும் சிக்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் விரைவில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.