வடலூரைச் சேர்ந்த செல்வமணி (72) அவர்கள், 36 ஆண்டுகள் அரசு சேவையை முடித்து ஓய்வு பெற்ற பின் மீண்டும் கல்விக்காக கல்லூரியில் சேர்ந்திருப்பது மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சீனிவாசா சுப்பராய பாலிடெக்னிக் கல்லூரி, புத்தூரில் டிப்ளமா படித்து வரும் அவர், பி.காம் மற்றும் எம்.பிஏ முடித்திருந்தாலும் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் மீண்டும் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
காலை வகுப்பு 9.30க்கு நேரம் தவறாமல் வருவதும், மனைவிக்கு உணவு சமைத்து விட்டு தனது மதிய உணவை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வருவதும், வகுப்பில் ஒழுக்கமாக பங்கேற்பதும், மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.
மாணவர்கள் அவரை “தாத்தா” என்று அன்புடன் அழைக்கின்றனர். வயது தடையல்ல, மன உறுதி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை அவர் தனது செயலில் நிரூபித்து வருகிறார்.
கல்லூரி முதல்வர் குமார் சில மாணவர்கள் படிக்க விருப்பம் இல்லை என்று காரணம் சொல்வார்கள். அப்போது நான் செல்வமணியை எடுத்துக்காட்டுகிறேன். இந்த வயதில் அவர் படிக்கும்போது, இளம் மாணவர்கள் படிக்க முடியாதா?” என்று தெரிவித்தார்.
செல்வமணியின் கல்வி பற்றிய உறுதி, இன்றைய தலைமுறைக்கு ஒரு உண்மையான ஊக்கமாக உள்ளது.








