என் சாவுக்கு உயர் அதிகாரிகள் தான் காரணம் எனப் போக்குவரத்து அலுவலரிடம் மனு அனுப்பிவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடாஞ்சேரி ஆதனூர் பகுதியில் வசித்து வந்த யுவராஜ் என்பவர் தாம்பரம் மாநகர் போக்குவரத்து கழகத்தின் பணிமனையில் ஜே.இ. ஆகப் பணியாற்றி வந்தார். கடந்த 12.08.2025 முதல் கழுத்து வலி காரணமாக அவர் பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, தாம்பரம் பணிமனை கிளை மேலாளருக்கு மருத்துவச் சான்றிதழ் அனுப்பி பலமுறை மருத்துவ விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அங்கு பணியாற்றும் ஏ.இ கோவிந்தராஜ் என்பவர், யுவராஜ் அனுப்பிய மருத்துவச் சான்றிதழ்களை நிராகரித்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த யுவராஜ், மருத்துவ விடுப்பு தொடர்பான கோப்புகளை உயர் அதிகாரியான எஸ்ஆர்டி துறையின் சொர்ணலதா என்பவருக்கும் அனுப்பியுள்ளார். அவர், யுவராஜ் விடுப்பை நிராகரித்து, “விடுப்பு நிராகரித்தும், வேலைக்கு வரவில்லை” என கண்டித்ததாகத் தெரிகிறது. மேலும், அவர் பணிக்கு வர முடியாத படி லவன்சி ஆர்டரும் போட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக யுவராஜ்க்கு பணியும் வழங்காமல், அதே நேரத்தில் ஊதியமும் வழங்கப்படாமல், குடும்பம் பொருளாதார நெருக்கடியில் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யுவராஜ் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரும் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாக உடன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தனது மருத்துவப் பிரச்சனைக்கும், பணியும் ஊதியமும் வழங்காத நிலைக்கும், அதிகாரிகளின் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கும் பயந்த அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ரயில் வந்தபோது, அதன் முன் பாய்ந்து யுவராஜ் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், டிஜிபி அலுவலகத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், “என் சாவுக்கு காரணம் உயர் அதிகாரியான எஸ்ஆர்டி சொர்ணலதா மற்றும் தாம்பரம் பணிமனையில் பணிபுரியும் ஏ. இ.கோவிந்தராஜ்” எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் தனது மொபைலில் இருந்து அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “என் தற்கொலைக்குப் பிறகு எனக்கு வரவேண்டிய அனைத்து நன்மைகளையும் என் குடும்பத்தினருக்கு வழங்கி உதவ வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். யுவராஜின் தற்கொலை, அவரது குடும்பத்தினரிலும், உடன் பணியாளர்களிடமும் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.








