Home தமிழகம் “தமிழகத்தில் வானிலை மாற்றம்: வெயில் அதிகரிப்பு, மழை சாத்தியம்”

“தமிழகத்தில் வானிலை மாற்றம்: வெயில் அதிகரிப்பு, மழை சாத்தியம்”

குளிரால் நடுங்கி வந்த தமிழ்நாடு, அடுத்து வெயிலால் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி தொடங்கி ஐந்து நாட்கள் முடிவடைந்த நிலையில், அதற்குள்ளாகவே வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழக பகுதிகளிலும் புதுவையிலும் வரண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

பிப்ரவரி 6 முதல் 9 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளிலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும்.

பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கக்கூடும்.

பிப்ரவரி 6 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.