ஆர்.கே.நகர் ஐஓசி பகுதியில் தடுப்பு வேலிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டைஐ.ஓ.சி (IOC) அரூர் நெடுஞ்சாலையில் சிறிய நீர் தேக்கம் உள்ளது.
இந்த இடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடி செலவில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
இந்நிலையில், தடுப்பு வேலிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், இதே சாலையில் இரண்டு பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பூங்கா பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். நீர் தேக்கத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்காமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்புகள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.








