பென்குயின் என்பது பறக்க முடியாத பறவை என்றாலும், இயற்கையில் அதைவிட சிறந்த நீச்சல்காரன் வேறு இல்லை. பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில், குறிப்பாக அண்டார்டிகா போன்ற கடும் குளிர்ப் பகுதிகளில் வாழும் இந்தப் பறவைகள், குளிரை எதிர்க்க இயற்கை தந்த அற்புதமான அமைப்புகளுடன் உருவாகியுள்ளன.
தடித்த கொழுப்பு அடுக்கு, அடர்த்தியான நீர்ப்புகா இறகுகள், உடலுக்குள் சிக்கிய காற்று பாக்கெட்டுகள் ஆகியவை கடும் பனியிலும் உயிர்வாழ உதவுகின்றன. பனி கூட பென்குயின் உடலில் ஒட்டாமல் வழுக்கி விழும் அளவுக்கு அவற்றின் இறகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பென்குயின்கள் நடக்கும்போது காமெடியாகத் தோன்றினாலும், உண்மையில் அவைகளுக்கு முழங்கால் உள்ளது. அது உடலுக்குள் மறைந்திருப்பதால் வெளியில் தெரியாது. நீரில் அவைகளின் உண்மையான திறமை வெளிப்படும். இறகுகளை இறக்கைகளாக பயன்படுத்தி, பறவைகள் வானில் பறப்பது போலவே, பென்குயின்கள் தண்ணீருக்குள் “பறக்கின்றன”.
சில வகை பென்குயின்கள் 500 மீட்டர் ஆழம் வரை மூழ்கி, 20 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்துக் கொள்ளும். அந்த நேரத்தில் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 70-இல் இருந்து 3 அல்லது 4 ஆகக் குறையும். இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்றாலும், பென்குயின்களுக்கு இது இயற்கையான உயிர்காக்கும் முறையாகும்.
பறக்கும் பறவைகளுக்கு உள்ள வெற்றிட எலும்புகள் பென்குயின்களுக்கு இல்லை. மாறாக, கனமான திட எலும்புகள் இருப்பதால் அவை தண்ணீரில் மிதக்காமல் எளிதில் மூழ்க முடிகிறது.
உப்பு நீரை நேரடியாக குடிக்கும் அரிய திறனும் பென்குயின்களுக்கு உண்டு. கண்களின் அருகே உள்ள ஒரு சிறப்பு சுரப்பி உப்பை பிரித்து மூக்கின் வழியாக வெளியேற்றுவதால், அவை கடல் நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றன.
பென்குயின்களின் கருப்பு–வெள்ளை நிறம் அழகுக்காக மட்டும் அல்ல. மேலிருந்து பார்த்தால் கருப்பு நிறம் கடலுடன் கலந்துவிடும்; கீழிருந்து பார்த்தால் வெள்ளை நிறம் வானத்தைப் போல தோன்றும். இது எதிரிகளிடமிருந்து தங்களை மறைக்க உதவும் இயற்கை மறைமுகக் கவசம்
மேலும், பென்குயின்கள் கண்களால் மட்டுமல்ல, உடலில் உள்ள அழுத்த உணர்வு சென்சர்களால் நீரோட்டத்தை உணர்ந்து திசைமாற்றிக் கொள்ளும் திறனையும் பெற்றுள்ளன. இதுவே நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்திற்கும் தூண்டுதலாக இருந்துள்ளது.
குடும்ப வாழ்க்கையில் பென்குயின்கள் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு பொறுப்பானவை. பல வகை பென்குயின்கள் ஒரே துணையுடன் வாழ்கின்றன. காதலை வெளிப்படுத்த கற்களை பரிசாக கொடுப்பதும் உண்டு.
Emperor Penguin இனத்தில், ஆண் பென்குயின் தான் முட்டையை தனது கால்களின் மீது வைத்து, வயிற்றுத் தோலால் மூடி, கடும் பனிக்காற்றிலும் இரண்டு மாதங்கள் வரை சாப்பிடாமல், தூங்காமல் பாதுகாக்கும். அந்த நேரத்தில் அவை முழுமையாக உறங்காது; சில விநாடிகள் மட்டுமே நீடிக்கும் சிறிய “மைக்ரோ தூக்கம்” தான்.
குட்டிகள் பிறந்த பிறகு, ஆயிரக்கணக்கான குட்டிகள் ஒன்றாகக் குழுமி இருக்கும் நிலையில் கூட, தன் பெற்றோரைக் குரல் மற்றும் வாசனையின் மூலம் அடையாளம் கண்டு பிடிக்கும் திறன் பென்குயின்களுக்கு உண்டு.
ஒவ்வொரு கூட்டத்துக்கும் தனித்தனி குரல் உச்சரிப்பு இருப்பதால், பென்குயின்களுக்கும் மனிதர்களைப் போல “accent” இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அவைகள் உடல் மொழியாலும் பேசுகின்றன; தலை சாய்வு, இறகு விரிப்பு, மார்பு வீக்கம் போன்ற அசைவுகள் எச்சரிக்கை, காதல் அல்லது சண்டை என்பவற்றை வெளிப்படுத்தும்.
எல்லா பென்குயின்களும் பனிப்பகுதிகளில் மட்டுமே வாழ்வதில்லை. Galápagos பென்குயின் பூமத்தியரேகைக்கு அருகிலேயே, வெப்பமான சூழலிலும் வாழ்கிறது.
மேலும், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், டைனோசர்கள் காலத்தில், 6 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான பென்குயின்கள் வாழ்ந்ததற்கான புதைபடிவ ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
பென்குயின்களின் கழிவுகள்கூட விஞ்ஞானிகளுக்கு முக்கியமான தகவல்களை தருகின்றன. அவற்றின் மூலம் காலநிலை மாற்றம், கடல் உணவுச் சங்கிலியின் நிலை, பனிப்பாறைகளின் மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்கிறார்கள்.
கடும் மனஅழுத்தம் ஏற்பட்டால் சில பென்குயின்கள் இறகுகளை இழக்கும் நிலையும் உண்டு; அதனால் தான் விலங்குக் காட்சிசாலைகளில் அமைதியான சூழல் அவசியமாக்கப்படுகிறது.
இயற்கையில் மனிதர்கள் பெரிய எதிரிகளாக இல்லாத பகுதிகளில் வாழ்வதால், பென்குயின்கள் மனிதர்களை பயப்படாமல் ஆர்வத்துடன் பார்ப்பதும் உண்டு.
ஆனால் அவற்றைத் தொடுவது ஆபத்தானது. கூட்டாக வாழ்தல், பொறுப்பு, பொறுமை, சூழலோடு ஒத்துழைப்பு போன்ற வாழ்க்கைப் பாடங்களை பென்குயின்கள் மனிதர்களுக்கு சொல்லித் தருகின்றன. காமெடியாக நடந்து, அழகாகத் தோன்றினாலும், பென்குயின்கள் உண்மையில் இயற்கையின் மிகச் சிறந்த உயிர்வாழ் கலைஞர்கள்.








