Home உலகம் “டெங்குவுக்கு FULL STOP! ஒரு ஊசி போதும்…

“டெங்குவுக்கு FULL STOP! ஒரு ஊசி போதும்…

மழைக்காலம் வந்தாலே நமக்கு வரும் பெரிய பயம் — டெங்கு காய்ச்சல். கொசுக்களால் பரவும் இந்த நோய் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கூட தள்ளி விடுகிறது. டெங்குவுக்கு நிரந்தர தீர்வு இல்லை என்று நம்மில் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்த எண்ணத்தை மாற்றி அமைக்கும் வகையில் பிரேசிலில் இருந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில், உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆம் — இனி இரண்டு டோஸ் தேவையில்லை; ஒரே ஒரு ஊசி போட்டாலே டெங்குவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும். இது மருத்துவ உலகில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய தடுப்பூசியின் பெயர் ‘புட்டாண்டன் டிவி’ (Butantan-DV). பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள புட்டாண்டன் நிறுவனம் எட்டு ஆண்டுகள் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. 12 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த பிரேசில் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு உலகில் கிடைத்த ஒரே டெங்கு தடுப்பூசி QDENGA. அதை மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக போட வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இந்த புதிய சிங்கிள்-டோஸ் தடுப்பூசி வந்ததால் தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் வேகமாகவும் எளிதாகவும் அமையும்.

இந்த தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது?

16,000க்கும் மேற்பட்ட தன்னார்வளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்த தடுப்பூசி கடுமையான டெங்குவுக்கு எதிராக 91.6% செயல்திறன் கொண்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறந்த மற்றும் உயர்ந்த செயல்திறன் என மதிப்பிடப்படுகிறது.

டெங்கு காய்ச்சலை “எலும்பை முறிக்கும் காய்ச்சல்” என்று கூட அழைப்பார்கள். கடுமையான உடல்வலி, சோர்வு, காய்ச்சல் போன்ற தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இரத்தக் கசிவை உண்டாக்கும் ஹீமோராஜிக் காய்ச்சலாக மாறி மரணத்திற்கும் வழிவகுக்கும்.

இந்த நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், பூமி வெப்பமயமாதல் காரணமாக தங்களுடைய வழக்கமான பரப்பை தாண்டி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகின்றன.

2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 1 கோடி 46 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுமார் 12,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரலாற்றிலேயே அதிகமான எண்ணிக்கை. இதில் பாதி மரணங்கள் பிரேசிலில் தான் ஏற்பட்டுள்ளன.

பிரேசில் அரசு இந்த புதிய தடுப்பூசியை 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் மூன்று கோடி டோஸ்கள் அளவில் மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றம், “டெங்கு இல்லாத ஒரு உலகம்” உருவாகும் என்பதில் நமக்கு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. இந்த தடுப்பூசி விரைவில் இந்தியாவுக்கும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.