ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் நடத்திய ஆய்வின் முடிவில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி சமத்துவமின்மையை அதிகரித்து, நாடுகளுக்கிடையேயான டிஜிட்டல் மற்றும் பொருளாதார இடைவெளியை விரிவாக்கும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணினி அறிவியல் யுகத்தின் புதிய பாய்ச்சலாக ஏஐ உருவெடுத்துள்ளது. அதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், தற்போதைய யுகத்தை “ஏஐ யுகம்” என்று அழைக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது.
உலகளாவிய முன்னேற்றத்திற்கும், மனித வாழ்க்கை மேம்பாட்டிற்கும் ஏஐ புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. கிராமப்புறங்களிலிருந்து மருத்துவத் துறை வரை—வேளாண் ஆலோசனை, துரித மருத்துவ பரிசோதனை, துல்லியமான காலநிலை கணிப்புகள், பேரிடர் முன்னெச்சரிக்கை போன்ற பல துறைகளில் ஏஐ மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், தரவு பாகுபாடு, டீப் ஃபேக் அச்சுறுத்தல்கள், சைபர் தாக்குதல்கள், அதிக மின்சார நுகர்வு, வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சமூகங்களுக்கு இடையிலான டிஜிட்டல் இடைவெளி விரிவு போன்ற சவால்களும் ஏஐயால் அதிகரித்து வருகின்றன.
ஏஐயை யார், எப்படி, எந்த அளவில் பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வியே உலக நாடுகளுக்கு மிகப்பெரிய கொள்கை சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐநா செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த தனது ஆய்வில், ஏஐ வளர்ச்சி உலக நாடுகளுக்கிடையில் ஏழை–பணக்காரர் பாகுபாட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
ஏஐ உலகளவில் வேகமாக வளர்கிறது; ஆனால் அதன் பலன் அனைவருக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
பணக்கார நாடுகளும் மேல்தட்டு மக்களும் ஏஐயால் அதிக நன்மை பெறுவர்; ஏழை நாடுகள், மின்சாரம்-இணைய வசதி இல்லாத பகுதிகள், போர் பாதித்த மக்கள் போன்றோர் ஏஐ வளர்ச்சியில் பின்தங்கும் அபாயம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலை முந்தைய தொழிற்புரட்சி காலத்தில் ஏற்பட்ட பாகுபாட்டை ஒத்ததாகும். அப்போது மேற்கத்திய நாடுகள் வேகமாக வளர்ந்த நிலையில், பிற நாடுகள் பின்தங்கின. ஏஐ காலமும் அதே பாதையை பின்பற்றக்கூடும் என்று ஐநா எச்சரிக்கிறது.
ஆசியாவின் சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் ஏஐ மூலம் வளர்ச்சி அடையும் நிலையில், ஆப்கானிஸ்தான், வனுவாட்டு போன்ற நாடுகள் பின்தங்க நேரிடும் என்றும் அறிக்கை கூறுகிறது.
ஆசியாவில் 25% மக்களுக்கு இன்னும் இணைய வசதே கிடைக்கவில்லை என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் சிலருக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் ஏஐயைப் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில், உலகளவில் பாகுபாடு அதிகரித்து, ஏழை–பணக்காரர் இடைவெளி மேலும் விரிவடையும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.








