நாட்டோ நாடுகளின் போர் விமானங்களுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்ட சுகோய்–57 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது என்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த சுகோய்–57 ரக போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியா–ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய்–57 ரக போர் விமானங்களை வழங்குவதோடு, படிப்படியாக அந்த விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. துபாய் விமான கண்காட்சியில் பேசிய ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அனைத்து உதிரிபாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் 100% தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யவும், இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
சுகோய்–57 ரக போர் விமானங்கள் வான், தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனைக் கொண்டவை. F–22 உள்ளிட்ட நாட்டோ நாடுகளின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலியை விட அதிக வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதால், இவ்விமானங்கள் ரேடார்களில் கண்டறியப்படுவது மிகவும் கடினம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளவும், அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறியவும் உதவுகிறது. இத்தகைய அதிநவீன போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க ரஷ்யா முன்வந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.








