Home உலகம் “அமைதியின் அதிபர் என்று தன்னை அறிவித்த டிரம்ப் – நோபல் விருதை நோக்கிய பெரும் நம்பிக்கை!”

“அமைதியின் அதிபர் என்று தன்னை அறிவித்த டிரம்ப் – நோபல் விருதை நோக்கிய பெரும் நம்பிக்கை!”

அமைதிக்கான நோபல் பரிசு தனக்குத்தான் வழங்கப்படும் என உறுதியாக நம்பிக்கையுடன் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்கிடையில், நேற்று வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் “தி பீஸ் பிரசிடெண்ட்” என்ற தலைப்புடன் டிரம்பின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, “தான் இதற்கு தகுதியானவர்” எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் டிரம்ப். கடந்த சில மாதங்களில் பல்வேறு நாடுகளுக்கிடையேயான போர்களை தானே நிறுத்தியதாகக் கூறி வருவதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையேயான மோதலை தானே சமரசம் செய்ததாகவும் அடிக்கடி பேசியுள்ளார்.

இரண்டு முறை அதிபராக பதவி வகித்த காலத்தில் டிரம்ப் ஏற்கனவே இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவ்வாண்டும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, கம்போடியா பிரதமர் ஹன் மானட், சில அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் இணைந்து டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்காக பரிந்துரைத்துள்ளனர்.

டிரம்பின் நம்பிக்கை உச்சத்தில் இருந்தாலும், உண்மையில் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்க வரலாற்றில் நான்கு அதிபர்களும் ஒரு துணை அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், தியோடர் ரூஸ்வெல்ட் ரஷ்யா–ஜப்பான் போருக்கு மத்தியஸ்தம் செய்து போர்ட்ஸ்மௌத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அந்த விருது இன்னும் வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவில் உள்ள “ரூஸ்வெல்ட் அறையில்” பாதுகாக்கப்படுகிறது.

அடுத்து,  உட்ரோ வில்சன் – அமெரிக்காவின் 28வது அதிபர். முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்து, உலக அமைதியை பேணும் நோக்கில் லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பை உருவாக்கியதற்காக அவர் கௌரவிக்கப்பட்டார்.

மூன்றாவதாக, ஜிம்மி கார்டர், அமெரிக்காவின் 39வது அதிபர். பதவி விலகி 21 ஆண்டுகள் கழித்து, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை தேடும் முயற்சிகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்திய பணிகள், பொருளாதார–சமூக முன்னேற்றத்துக்கான பங்களிப்புகள் ஆகியவற்றுக்காக அவர் இந்த விருதைப் பெற்றார்.

நான்காவதாக, பராக் ஒபாமா – பதவி ஏற்று ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே, அணு ஆயுதக் குறைப்பிற்கும், காலநிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கும், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்த பங்களிப்பிற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

மேலும், முன்னாள் துணை அதிபர் அல் கோர், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகளவில் பரப்பியதற்காக 2007ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் என்பதும் நினைவுகூரத்தக்கது.