கெவின் வாஷ் என்ற ஒற்றை நபர் தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக இருப்பது நம்மில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். தங்கத்தின் விலை குறையும் அளவு இவர் என்ன செய்தார் என்பது மற்றும் தங்கத்தின் விலை வரும் காலங்களில் அதிகரிக்குமா? குறையுமா?
கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவு பல மடங்கு உயர்ந்தது. இது சர்வதேச அரங்கில் பெரும் அசாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டது.
தங்கவிலை இந்த அளவுக்கு அதிகரித்ததற்கு ரஷ்யா–ஈக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் கணிக்க முடியாத செயல்பாடுகள் முக்கிய காரணமாக கருதப்பட்டன.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு போன்ற மிரட்டல்கள் காரணமாக சீனா மற்றும் பிற நாடுகள் டாலரின் மீதான நம்பிக்கையை இழந்து தங்களிடம் இருந்த அமெரிக்க பத்திரங்களை முன் எப்போதும் இல்லாத அளவு விற்று அதற்குப் பதிலாக தங்கத்தை வாங்கி குவித்தனர்.
இந்தியாவும் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 77 டன் தங்கத்தை வாங்கி சேர்த்தது. இந்த வரிவிதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்படுவதைத் தூண்டும், டாலரின் மதிப்பு குறையும் நிலையை உருவாக்கும், மேலும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதற்கான அறிகுறிகளும் வெளிவந்துவிட்டன.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டாக தங்கத்தை கருதி அதில் முதலீடு செய்தனர். சர்வதேச அரங்கில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைய இந்த சூழலும் முக்கிய காரணமாக இருந்தது.
இச்சூழலில் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வாஷ் தேர்வு செய்யப்படலாம் என்ற செய்தி வெளியானது. பணவிகிதத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகமாக உயர்த்த ஆர்வம் கொண்ட கெவின் வாஷ் பற்றிய இந்த செய்தி முதலீட்டாளர்களுக்கு டாலரின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கள் கவனத்தை அமெரிக்க பங்குச் சந்தையும் டாலர்–அமெரிக்க அரசு பத்திரங்களிலும் மாற்றினர்.
இதனால் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வாஷ் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இதன்போது இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹14,720 குறைந்தது. டாலரின் மீதான நம்பிக்கையை அதிகரித்த சூழலில் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்து தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கினர், இது தங்கத்தின் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த காரணங்களால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் டிரம்ப் திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினால் சர்வதேச பொருளாதார சூழல் மாறி தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு.








