Home உலகம் “மௌனமாக சுவாசிக்கும் தாவரங்களை மனிதர்கள் முதன்முறையாக நேரில் பார்த்துள்ளனர்!”

“மௌனமாக சுவாசிக்கும் தாவரங்களை மனிதர்கள் முதன்முறையாக நேரில் பார்த்துள்ளனர்!”

மனிதர்களாகிய நாம் சுவாசிப்பதை மற்றவர்களால் பார்க்கவும் உணரவும் முடியும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள் சுவாசிப்பதை இதுவரை யாராவது நேரில் பார்த்திருக்கிறோமா? பல நூற்றாண்டுகளாக அறிவியல் புத்தகங்களில் ஒரு பாடமாக மட்டுமே இருந்த தாவரங்களின் சுவாசம், தற்போது முதன்முறையாக திரையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மௌனமாக சுவாசிக்கும் தாவரங்களின் உலகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் எவ்வாறு உலகிற்கு திறந்து காட்டியுள்ளனர் என்பதைக் காணலாம்.

தாவரங்களின் இலைகளின் அடிப்பகுதியில் ஸ்டமட்டா எனப்படும் பல்லாயிரக்கணக்கான நுண்ணிய துளைகள் உள்ளன. கிரேக்க மொழியில் “வாய்” என்று பொருள்படும் இவையே தாவரங்களின் சுவாச நுழைவாயில்கள்.

இதன் வழியாகவே ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான கார்பன் டைஆக்சைடை தாவரங்கள் உள்ளிழுக்கின்றன; உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.

அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சுமார் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் விளைவாக, தாவரங்கள் சுவாசிப்பதை நிகழ்நேரத்தில் படம் பிடிக்கக்கூடிய “ஸ்டமட்டா இன்சைட்” என்ற புரட்சிகரமான கருவியை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை நுண்ணோக்கி மூலம் அசைவற்ற படங்களை மட்டுமே பார்த்த விஞ்ஞானிகளுக்கு, இது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப வெற்றியாக கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூன்று முக்கிய கூறுகளை ஒருங்கிணைக்கிறது.

உயிருள்ள திசுக்களுக்கு எந்த சேதமும் விளைவிக்காமல், இலைகளின் அசைவுகளை முப்பரிமாணத்தில் உயர் தெளிவுடன் வீடியோவாக பதிவு செய்யும் திறன் இதற்குள்ளது.

உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய அறையில் இலையை வைத்து, அங்குள்ள வெப்பநிலை, ஒளி, ஈரப்பதம் மற்றும் கார்பன் டைஆக்சைடு அளவை மாற்றுவதன் மூலம், நிஜ உலகச் சூழலில் தாவரம் எப்படி செயல்படுகிறது என்பதை உணரிகளின் மூலம் விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இலைகளின் இயக்கத்தை தானாகவே பகுப்பாய்வு செய்து, அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகின்றன என்பதை துல்லியமாக விளக்குகிறது.

இந்த ஆய்வு ஏன் முக்கியமானது என்பதை இப்போது பார்ப்போம். இந்த கண்டுபிடிப்பு தாவரங்களின் அன்றாட போராட்டத்தை நமக்கு தெளிவாக வெளிப்படுத்துகிறது.

வெயில் அதிகமாக இருக்கும் போதும், ஈரப்பதம் குறையும் போதும், நீர் இழப்பைத் தடுக்க இலைத்துளைகள் எவ்வளவு புத்திசாலித்தனமாக தங்களை மூடிக்கொள்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் நேரலையில் காண முடிகிறது.

அதே நேரத்தில், கார்பன் டைஆக்சைடை உள்வாங்கி ஒளிச்சேர்க்கையின் மூலம் நமக்கான ஆக்சிஜனையும், தங்களுக்கு தேவையான உணவையும் தாவரங்கள் உருவாக்குகின்றன.

முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு வெறும் காட்சி பதிவு மட்டுமல்ல; இது விவசாயத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் பயிர்கள் எவ்வாறு தப்பி பிழைக்கின்றன என்பதை புரிந்துகொள்வதன் மூலம், வறட்சியைத் தாங்கக்கூடிய புதிய பயிர் வகைகளை உருவாக்க முடியும்.

மேலும், புவி வெப்பமடைதலால் தாவரங்களின் சுவாசம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து, எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

தாவரங்களின் இந்த மௌனமான சுவாசம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அடுத்த கட்டமாக, பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகளின் சுவாச முறைகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.