Home உலகம் உனக்கு வந்தால் ரத்தம்… எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? – அமெரிக்காவை அலறவிட்ட இந்தியா…!

உனக்கு வந்தால் ரத்தம்… எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? – அமெரிக்காவை அலறவிட்ட இந்தியா…!

ரஷ்யாவிடம் எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா மீது மேலும் கூடுதலாக வரிவிதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்ததற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக நாடுகள் மீது வரி விதிப்பு என்ற வர்த்தக போரை நடத்தி வருகிறார். முதலில் இந்தியா எங்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கிறது, அதனால் இந்தியாவிற்கு நாங்கள் வரி விதிக்கிறோம் எனக்கூறினார். இதனிடையே ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால் டிரம்பின் பேச்சுக்கு அசைந்து கொடுக்காத புதின், உக்ரைன் மீது இன்னும் அதிக உக்கிரத்தோடு தாக்குதலை தொடர்ந்து வருகிறார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா மீது திரும்பியுள்ளார் டிரம்ப். இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான், அந்நாடு தொடர்ந்து உக்ரைனுடன் போரிட முடிகிறது என்றும், உக்ரைன் மக்கள் கொலை செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கவலை இல்லை என்றும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

இதையடுத்து இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க உள்ளதாக அறிவித்தார். அத்துடன் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை மெளனம் காத்து வந்த இந்தியா முதல் முறையாக பதிலடி கொடுத்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமல்லாது அந்த எண்ணையில் பெரும் பகுதியை வெளிச்சந்தையில் விற்பனை செய்து இந்தியா கொள்ளை லாபம் ஈட்டுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இதனை இந்தியா தீட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை குறி வைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீப் ஜெயஸ்வால் குற்றம் சாட்டி உள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்தியாவை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் டார்க்கெட் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்றும், பகுத்தறிவு இல்லாத செயல் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவை குற்றப்படுத்தும் நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பில் தான் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஜெய்ஷ்வால், பல்லேடியம் உலோகத்தையும் அணுசக்தி துறைக்கு தேவையான யுரேனியம் எக்ஸாஃப்ளோரைடு ரஷ்யாவிடமிருந்துதான் அமெரிக்கா வாங்குவதாக தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.