Home உலகம் தண்ணீர் திவால் உலகை எச்சரிக்கிறதா? ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை

தண்ணீர் திவால் உலகை எச்சரிக்கிறதா? ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை

தண்ணீர் திவால் குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை, உலகத்திற்கு அபாய சங்கை ஊதுவது போல் இருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரை விட நாம் சுரண்டிய நீரின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளதாக பல தரவுகளால் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள உலகளாவிய தண்ணீர் திவால் அறிக்கை நிலத்தடி நீர் குறைந்து வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை பட்டியலிட்டு இருக்கிறது.

இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதை தாண்டி, நாம் மீள முடியாத ஒரு பேராபத்தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், மனித குலத்தின் வாழ்வாதாரத்திற்கான அபாயமாகவும் பார்க்கப்படுகிறது.

உலகில் 20 பெரிய நிலத்தடி நீர்நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண தருவாயில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றி எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாக கிடைக்கும் நீரின் அளவை விட நாம் பயன்படுத்தும் நீர் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தை விட, நாம் அதனை உரிஞ்சி எடுக்கக்கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது என ஐநா எச்சரித்துள்ளது.

மேலும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் நகரமயமாக்கள் ஏற்படுத்தும் அபாயங்களையும் அறிக்கை விவரித்து கவலை தெரிவித்துள்ளது. மூன்றாம் உலகப் போரு தண்ணீருக்காகவே நடக்கும் என்ற பேச்சுகள் வெறும் யூகமாக அல்ல; அது நிதர்சனமான உண்மையாக இருப்பதை ஐநாவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல, உலகளாவிய உணவு பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஐநா சுட்டிக்காட்டியுள்ள அறிக்கையில் இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருப்பதாகவும், இந்தியாவின் தெற்கு பகுதி, குறிப்பாக தமிழ்நாடு, ஆபத்தான நிலைகளில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலும் சென்னை நகரம், உலக அளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019ல் சந்தித்த தண்ணீர் இல்லாத நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்திருந்தாலும், அதற்கான தீர்வுகளையும் வழங்கியுள்ளது. அதன்படி:

  • தண்ணீர் மேலாண்மையை இனி செய்ய முடியாது; திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்க வேண்டும்.
  • அதிக நீர் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.
  • விவசாயத்தில் சொட்டுநீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.
  • நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும்.
  • நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
  • பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்ற வேண்டும்.
  • நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வழுபடுத்த வேண்டும்.

இத்தகைய தீர்வுகள் மூலம் உலகம் நீர் திவால் அபாயத்தை சமாளிக்க வழியமைக்கலாம் என்பது அறிக்கையின் முக்கிய நோக்கம்.