விண்வெளி ஆராய்ச்சியில் நடந்துள்ள முக்கியமான நிகழ்வு தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.அதாவது புதிய கண்டுபிடிப்பாக யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் ஒரு புதிய நிலவு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
நாசாவின் சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த போது இந்த நிலவு தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் தற்காலிகமாக இதற்கு எ 2025 U1 என்ற பெயர் வழங்கியுள்ளனர். சுமார் 10 km விட்டம் கொண்ட இந்நிலவு மிகவும் சிறியதாக இருப்பதால். இதை 1986 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தை நெருங்கி சென்ற வாயேஜர் 2 விண்கலம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜேம்ஸ் இன் நுணுக்கமான கேமரா திறனே இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலவு யுரேனஸ் கிரகத்தின் வளையங்களுக்குள் ஒபேலியா மற்றும் பியாங்கா எனப்படும் நிலவுகளுக்கு இடையில் சீரான சுற்றுப்பாதையில் இயங்குகிறது. இத்துடன் யுரேனஸ் கிரகத்தின் நிலவுகளின் எண்ணிக்கை இதுவரை இருந்த 28லிருந்து 29 ஆக உயர்ந்துள்ளது.
இதை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது இது மிக சிறிய கண்டுபிடிப்பு போல் தோன்றினாலும் அதன் முக்கியத்துவம் அளவிட முடியாதது.
யுரேனஸ் கிரகத்தை சுற்றி இன்னும் பல மறைந்திருக்கும் நிலவுகள் இருக்கக்கூடும். இந்த கண்டுபிடிப்பு யுரேனஸின் வளைய அமைப்பு மற்றும் அதன் நிலவுகள் உருவான வரலாறு குறித்து புதிய தகவல்களை வெளிக்கொண்டு வரும் என தெரிவித்தனர்.
வானியலாளர்கள் சூரிய குடும்பத்தின் தொலைதூர கிரகங்களையும் அவற்றை சுற்றும் சிறிய பொருட்களையும் ஆராய்வதில் ஜேம்ஸ் தொலைநோக்கி ஒரு புதிய வாசலை திறந்து வைக்கிறது என கூறுகின்றனர்.
இந்த புதிய நிலவு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் மூட்டுவதாக இருப்பதோடு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மையில்கல்லாக பார்க்கப்படுகிறது.








