ரஷ்ய அதிபர் புதின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உச்சப்படியான ஐந்து அடுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 23வது இந்தியா–ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகிறார்.
சர்வதேச அளவில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி முழுவதும் ஐந்து அடுக்குகளைக் கொண்ட கடுமையான பாதுகாப்பு அமையப்பட்டுள்ளது.
உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய, ரஷ்யாவிலிருந்து உயர் பாதுகாப்பு கமாண்டோக்கள் ஏற்கனவே டெல்லியை வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள், டெல்லி போலீசார் மற்றும் இந்திய பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயல்படுகின்றனர்.
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, ட்ரோன்கள், ஸ்நைப்பர்கள், ஏஐ கண்காணிப்பு, முகஅங்கீகார கேமராக்கள், சிறப்பு படையினர், கமாண்டோக்கள் ஆகியவை ஒருங்கிணைந்த பாதுகாப்பு வலயத்தில் செயல்படுகின்றன.
ஐந்து அடுக்கு பாதுகாப்பில், வெளிப்புறப் பாதுகாப்பை தேசிய பாதுகாப்புப் படையினரும் டெல்லி காவல்துறையும் கவனிக்கும்.
அதற்குள் உள்ள அடுக்குகளில் ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினர் பொறுப்பேற்பார்கள்.
புதின் மற்றும் பிரதமர் மோடி ஒரே இடத்தில் இருக்கும்போது, இந்தியாவின் சிறப்பு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த கமாண்டோக்களும் உள் பாதுகாப்பு வளையத்தில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினின் பாதுகாப்பு விவரங்களில் முக்கியமாக, ‘சக்கரங்களில் நகரும் கோட்டை’ என அழைக்கப்படும் அவரது அதிகாரப்பூர்வ கவச வாகனமும் ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
அவரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த இவ்வூர் செனட் லிமோசின் காரில் புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி மட்டுமல்லாமல், வெடிகுண்டுத் தாக்குதல்களையும் தடுக்கக் கூடிய அமைப்புகள் உள்ளன.
ராக்கெட் எதிர்ப்பு கவசம், தாக்குதலைத் தடுக்கும் நவீன கவுண்டர்–அட்டாக் பாதுகாப்பு ஆயுதங்கள் போன்றவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. காருக்குள் அவசரகால மருத்துவ வசதிகளும் உபகரணங்களும் இடம் பெற்றுள்ளன.
புதின் பயணிக்கும் வழிகள், பார்வையிடும் இடங்கள், சந்திப்பு நடைபெறும் பகுதிகள், தங்கும் விடுதி போன்ற அனைத்தும் பட்டியலிடப்பட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.








