ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி வந்துள்ளார். இந்த உயர்மட்ட பயணத்தால் டெல்லியின் ஐடிசி மௌரியா ஹோட்டல் தற்போது உலக கவனத்தின் மையமாகியுள்ளது. மீடியாக்களும் , பாதுகாப்பு ஏஜென்சிகளும் ஹோட்டலை சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
புதினின் விமானம் மாலை 4.30க்கு டெல்லியில் தரையிறங்குவதற்கு முன்பே அவரின் பாதுகாப்புக் குழுவினர் ஹோட்டலை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
தற்போது அந்த ஹோட்டல் ஒரு ராணுவ கோட்டையைப் போல் மாறிவிட்டது. ஹோட்டலில் உள்ள 437 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நடைபாதையும் மூடப்பட்டுள்ளதுடன், உள்ளே வரும் ஒவ்வொரு நுழைவாயிலும் மிகக் கடுமையான கண்காணிப்பு நடக்கிறது.
அந்தப் பகுதியில் ஒரு ஈ கூட நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.சரி, இவ்வளவு பெரிய ஹோட்டலில் புதின் எங்கு தங்கப் போகிறார்? இதுதான் இந்தச் செய்தியின் ஹைலைட்.
ஐடிசி மௌரியா ஹோட்டலில் ‘மணி மகுடம்’ போல திகழும் சாணக்கியா சூட் என்ற பிரம்மாண்ட அறையில்தான் அவர் தங்குகிறார். இந்த அறையின் ஒரு நாள் வாடகையே சுமார் 8 முதல் 10 லட்சம் ரூபாய்.
சாணக்கியா சூட் சாதாரண அறை அல்ல — அது ஒரு குட்டி அரண்மனை! சுமார் 4600 சதுர அடிகளில் பரந்து விரிந்திருக்கிறது. இந்த அறையின் சுவர்கள் முழுவதும் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்; தரை முழுவதும் உயர்தர மரத்தால் செய்யப்பட்டு இருக்கும்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் தயத் மேத்தா அவர்களின் அசல் ஓவியங்களிலிருந்து தொடங்கி, அர்த்தசாஸ்திரம் குறித்த பழங்கால ஓவியங்கள் வரை சுவர்களில் அலங்கரிக்கின்றன.
உணவு பரிமாறும் தட்டுகள் உலகப் புகழ்பெற்ற வில்லரி & போச் நிறுவனத்தின்கலும், குடிக்கும் கண்ணாடிகள் பிரான்ஸ் நாட்டின் கிரிஸ்டல் டி பாரிஸ் நிறுவனத்தின்கலும் ஆகும்.
அறைக்குள் தனி நீராவி குளியலறை, உடற்பயிற்சி கூடம், 12 பேர் வசதியாக அமரக்கூடிய பிரம்மாண்ட டைனிங் ஹால், தனிப்பட்ட அலுவலகம், நூலகம் என எல்லா வசதிகளும் நிரம்பிக் கிடக்கின்றன.
பழம்பெருமையும் நவீன சொகுசும் கலந்த ஒரு ராஜமரியாதையை விருந்தினர்கள் அனுபவிக்கும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவிற்கு வரும் பல உலகத் தலைவர்களின் முதல் விருப்பமாக இந்த ஐடிசி மௌரியா ஹோட்டல் திகழ்ந்து வருகிறது. புதின் போன்ற முக்கிய விருந்தினர்களுக்காக இந்த ஹோட்டல், சொகுசைத் தாண்டி, காக்க முடியாத பாதுகாப்பு கோட்டையாக மாறும்.
இருப்பினும், அந்தப் பாதுகாப்பால் அவர்கள் ‘ராஜ அரண்மனையில் தங்கும்’ உணர்வை இழக்காது இருப்பதிலும் இந்த ஹோட்டல் ஒரு போதும் தவறுவதில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.








