திடீரென 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம்தான் நேபாள நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்.
நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வரும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என நேபாள அரசு கூறியுள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் 28ஆம் தேதியில் இருந்து ஏழு நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது. இந்த கெடு முடிவடைந்த நிலையில் இதுவரை பதிவு செய்யாமல் இருந்து வந்த 26 சமூக வலைதளங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பதிவு செய்யும் வரை இந்த தடை தொடரும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ் வலைதள பக்கம், முகநூல் பக்கம், இடாகராம், YouTube என 26 சமூக வலைதள பக்கங்கள் நேபாளத்தில் முடங்கி உள்ளது.
இதனால் இணையவாசிகள் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேபாள அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இணையவாசிகள், பேச்சுரிமை ஆர்வளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கை என அரசை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் டெலிகிராம் உள்ளிட்ட சில சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது என்றும் அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் நேபாள் அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம் நேபாள அரசின் முடிவுக்கு பேஸ்புக் மற்றும் இதர சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








