Home உலகம் “அமெரிக்க மிரட்டலுக்கு நடுவே ஈரான் அணு தளங்களில் பரபரப்பு”

“அமெரிக்க மிரட்டலுக்கு நடுவே ஈரான் அணு தளங்களில் பரபரப்பு”

அமெரிக்கா–ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்களில் புதிய கட்டுமானங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் வலுப்படுத்தப்பட்டிருப்பது சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஈரான் 408 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை பாதுகாப்பதற்காகவே இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஈரான் மீண்டும் அணு ஆயுதம் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ஈரானுக்கு அண்டை நாடுகளின் வான்வெளி பயன்படுத்தப்படலாம் என்ற நிலையில், அசர்பைஜான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளி மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெளிவுபடுத்தியுள்ளன.

ஹர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே இந்த நாடுகள் ஈரானுக்கு எதிரான போரை தவிர்க்க முயற்சிப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, போர் சூழல் தலைகீழாக மாறுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.