இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த வரி தொடர்பான பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளும் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரம் காரணமாக இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை, அமெரிக்கா அதிரடியாக 18 சதவீதமாக குறைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் நகை ஏற்றுமதி துறைகள், சுமார் 30 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க சந்தையை தடையின்றி அணுக முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மீதான வரி 110 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இருப்பினும், மின் வாகனங்களுக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் இந்த சலுகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஆப்பிள், பருத்தி மற்றும் சோயா எண்ணெய் போன்ற பொருட்களுக்கு இந்திய சந்தையில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு தேவையான ஜிபியூ (GPU) சிப் வர்த்தகத்தை அதிகரிப்பதற்காகவும், இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.








