புதுச்சேரியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற போது பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்ட பெண் சுற்றுலா பயணி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். புதுச்சேரியில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். இந்த நிலையில், பாண்டி மெரினா பகுதியில் பாறைகளுக்கு இடையில் நின்று கொண்டு ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண் சுற்றுலா பயணி ஒருவர் தவறி விழுந்தார்.
விழுந்ததில் அவர் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டார். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். பாறைகளின் இடுக்கில் பெண் சிக்கியிருந்ததால், கிரேன் உதவியுடன் மட்டுமே அவரை மீட்க முடியும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, மாலை சுமார் 7.50 மணியளவில் மீட்புப் பணி தொடங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உதவியுடன், கிரேன் மூலம் பெண் சுற்றுலா பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு அவர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.








