Home இந்தியா காற்று மாசு குழந்தைகளின் மூளையையே தாக்குகிறது – அதிர்ச்சி ஆய்வு

காற்று மாசு குழந்தைகளின் மூளையையே தாக்குகிறது – அதிர்ச்சி ஆய்வு

சூழல் சீர்கேடு வளரிளம் பருவத்தினரின் மூளையில் குளறுபடிகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சயின்ஸ் டைரக்ட் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, காற்றில் மாசுத் துகள்களின் அளவு PM 2.5-க்கு அதிகமாக இருந்தால் நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரிய வந்துள்ளது.

உலகமே டிஜிட்டல் யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், மனிதர்கள் உயிர்ப்புடன் இருப்பதற்கான மிக மிக அத்தியாவசிய தேவையான காற்று நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது என்பது நாம் அலட்சியப்படுத்த முடியாத உண்மையாகும்.

குறிப்பாக இந்திய நகரங்களான டெல்லி, மும்பை ஆகியவற்றில் காற்று மாசுபாடு காரணமாக மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் அதிகரித்துள்ளன.

மக்கள் அடர்த்தி மிக்க சென்னையிலும் வருங்காலத்தில் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகலாம். தலைநகர் டெல்லியில் நீதிமன்றம் தலையிட்டும் கூட காற்று மாசுபாட்டுக்கு உரிய தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, டிஜிட்டல் யுகத்தின் வளரிளம் பருவத்தினருக்கு காற்று மாசு ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, வளிமண்டலத்தில் காற்றில் மாசுத் துகள்கள் PM 2.5-க்கு அதிகரிப்பதும், நைட்ரஜன் டைஆக்சைடு அளவு உயர்வதும் காற்று மாசுபாட்டை அதிகரித்து, குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்துள்ளது.

சயின்ஸ் டைரக்ட் விஞ்ஞான இதழ், வளரிளம் பருவத்தினரின் மூளை அறிவாற்றல் வளர்ச்சி குறித்து பத்தாயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வை சுற்றுச்சூழல் கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில் பிரசுரித்துள்ளது.

இதன் விளைவாக, வளரிளம் பருவத்தினரின் மூளையின் வெளிப்புற அடுக்கு மெலிதல் அதிகரிக்கும் என்றும், அவர்களின் செயல் திறனை தீர்மானிக்கும் மூளையின் முன்பகுதி மற்றும் காதுகளுக்கு அருகில் அமைந்துள்ள மூளையின் பகுதிகளில் நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என்பதும் தெரிய வந்துள்ளது.

இத்தகைய காரணங்களால், இன்று நமக்கு இலவசமாக கிடைக்கும் தூய காற்றை நாளை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எதிர்வரும் காலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை உடலோடு இணைத்துக்கொண்டு வாழ வேண்டிய சூழலும் உருவாகலாம். எனவே காற்றை மாசுபடுத்தும் முன்பு, கொஞ்சமல்ல — நிறையவே சிந்தியுங்கள்.