பொறியியல் படிக்காமல், முழுமையாக கல்லூரி கல்வியையும் முடிக்காமல் இருந்த போதிலும், 19 வயதிலேயே ஒரு மாணவர் ஊர் மக்களுக்காக செல்போன் செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த மோத விக்னேஷ் என்பவர், எவ்வித முறையான பயிற்சியும் இன்றி, YouTube மூலமாகவே கணினி நுட்பங்களை கற்றுக்கொண்டு, இரண்டு ஆண்டு கால விடாமுயற்சியின் பலனாக “மணவை (Manavai)” என்ற பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார்.
ஒரு சாதாரண கூலி தொழிலாளியின் மகனான இவர், உணவுப் பொருட்கள் மட்டுமின்றி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை மக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே வாங்கும் வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளார்.
இந்த செயலியில், வெவ்வேறு கடைகளில் பொருட்களைத் தேர்வு செய்தாலும் ஒரே பில்லில் பணம் செலுத்தும் வசதி, மேலும் கடைகளில் விற்கப்படும் அதே விலையிலேயே பொருட்களை பெறும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
“எடுத்த உடனே நான் கம்ப்யூட்டருக்கு அடாப்ட் ஆகல. எங்கிருந்து எங்கோ நான் கொஞ்சம் கொஞ்சமா கம்ப்யூட்டருக்கு அடாப்ட் ஆகி வந்தேன். நிறைய வருஷமா கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன். பல விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சுக்கிட்டுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கேன்.
இப்போ நிறைய கம்பெனிகளிலிருந்து ஜாப் ஆஃபர்கள் வந்துச்சு. ஆனா எந்த ஜாப் ஆஃபரையும் அட்டெண்ட் பண்ணல. முழுக்க முழுக்க குடும்பத்துக்காக ஏதாவது ஒரு பிசினஸ் மாதிரி பண்ணணும்னு நினைச்சேன். இது பிசினஸ் என்றாலும், சின்ன அளவில்தான் இப்போ ஆரம்பிச்சு பண்ணிட்டு இருக்கேன்” என்றார்.
சந்தையில் பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் செயலியை, தனது திறமையால் வெறும் ₹16,000 செலவில் உருவாக்கியுள்ள இந்த இளைஞரின் முயற்சி அனைவரின் பாராட்டையும் பெறுகிறது.








