எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, வரிவிதிப்பு முறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தவிர, பெண்களை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட்டில் எந்தெந்த மாற்றங்கள் இடம் பெறலாம், பெண்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதற்கான கவனமும் அதிகரித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட்டில் இந்தியாவை மேலும் டிஜிட்டல் மையமாக்கும் வகையிலான பல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்திய பெண்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டத்தில், பெண்கள் பெயரில் தொடங்கப்பட்ட பல கணக்குகள் தற்போது செயலற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண பரிமாற்றம் தவிர, இந்த கணக்குகள் மூலம் பெரிதாக பலன்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை மாற்ற, 2026 பட்ஜெட்டில் ஜன் தன் கணக்குகளை காப்பீடு, கடன் உள்ளிட்ட நிதி சேவைகளுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெண்களுக்கென பிரத்தியேக கடன் அட்டைகள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
முதன்முறையாக வங்கி சேவைகளை பெறும் பெண்களுக்கான எளிய கடன் அட்டை திட்டங்கள் குறித்தும் அரசு கவனம் செலுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறைந்த ஆவணங்களுடன் எளிதாக பெறக்கூடிய சிறு மற்றும் குறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
இதன் மூலம் பெண்களிடையே கடன் பெறும் தயக்கம் குறையும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுயதொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு இது பெரும் உதவியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
காப்பீடு வசதிகள் இல்லாத பெண்களுக்கான பாதுகாப்பு திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.








