ஆண் பயணியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள பேருந்து பயண வீடியோ விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பெண் யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷிம்ஜிதாவை போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வடகரை பகுதியில் உறவினரின் வீட்டில் தங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெண் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு, மப்டியில் தனியார் வாகனத்தில் சென்று ஷிம்ஜிதாவை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கோழிக்கோடு, கோவிந்தபுரத்தைச் சேர்ந்த 41 வயதான தீபக், கடந்த 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதற்கு முன், ஜனவரி 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தீபக் கோழிக்கோட்டிலிருந்து கண்ணூருக்கு வேலைக்காக பேருந்தில் பயணம் செய்தபோது, பெண் யூடியூபர் ஷிம்ஜிதா, அவர் தன்னை பாலியல் நோக்கத்துடன் தொட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தீபக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
போலீசாரிடம் முறையான புகார் அளிக்காமல், ஷிம்ஜிதா அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் போலீசார் தீபக்கின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்ற வகையில் மட்டுமே பதிவு செய்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த தீபக்கின் குடும்பத்தினர், கோழிக்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தனர்.
ஆனால் தீபக் இறப்பதற்கு முன் எழுத்துப்பூர்வமான கடிதமோ அல்லது வாக்குமூலமோ விடவில்லை என்பதால், அந்த நேரத்தில் ஷிம்ஜிதாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சமூக ஊடகங்களில் ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண் யூடியூபருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் பயந்து நடக்கும் விதமாக பல மீம்ஸ்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த நிலையில், வழக்கறிஞர்கள் வி. தேவதாஸ் மற்றும் அப்துல் ரஹீம் பூக்கத் அளித்த புகாரின் பேரில், மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வடக்கு மண்டல டிஐஜிக்கு உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 19ஆம் தேதி, ஷிம்ஜிதா மீது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றச்சாட்டின் கீழ், ஐபிசி பிரிவு 108ன் கீழ் எஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது ஜாமீன் கிடைக்காத பிரிவு என்பதால், ஷிம்ஜிதா செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் முன்பு வெளிநாட்டில் வசித்திருந்ததால், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, சம்பவம் நடந்ததாக கூறப்படும் தனியார் பேருந்தின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தீபக் மதியம் 12.45 மணியளவில் பேருந்தில் ஏறியதும், அவருக்கு ஒரு நிமிடம் முன்பே ஷிம்ஜிதா பேருந்தில் ஏறியதும் பதிவாகியுள்ளது. காட்சிகளில் எந்த வாக்குவாதமோ அல்லது தொந்தரவு சம்பவமோ இடம்பெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயணத்தின் போது எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை என்றும், ஷிம்ஜிதா உதவி கோரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ பரவியதால்தான் தங்கள் மகனுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், பொய்யான குற்றச்சாட்டால் அவர் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் தீபக்கின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தீபக்கின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகளின் கூடுதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும், ஷிம்ஜிதாவின் டிஜிட்டல் சாதனங்கள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், முழுமையான விசாரணை முடிவுக்கு வரும்வரை யாரையும் குற்றவாளி என முடிவு செய்யக்கூடாது என்றும், ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்பதாலேயே அவர் முழுமையாக அப்பாவி என தீர்மானிக்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. விசாரணையின் முடிவில்தான் உண்மை என்ன என்பது தெளிவாகும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.








