Home தொழில்நுட்பம் “மொபைல் கேம் அதிர்ச்சி”22 வயது இளைஞர் உயிரிழப்பு!”

“மொபைல் கேம் அதிர்ச்சி”22 வயது இளைஞர் உயிரிழப்பு!”

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரின் கயிர்நகர் பகுதியில் உள்ள கூலர் வாலி தெருவைச் சேர்ந்தவர், 22 வயது இளைஞர் முகமது கைப். இவரது தந்தை ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதால், முகமது கைப் மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரீல் செய்வதில் ஆர்வம் காட்டி வந்த கைப்பிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் கேமிங்கில் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டிருந்தாலும், பலர் இந்திய பதிப்பு பிஜிஎம்ஐ மூலம் மொபைலில் பப்ஜி கேம் விளையாடுவதாக வழக்கம். அதேபோல், பிபி தொழில்நுட்பம் மற்றும் ஏபிகே கோப்புகளை பயன்படுத்தி சர்வதேச சர்வர்கள் மூலம் தடையை தாண்டி ஒரிஜினல் பப்ஜி கேம் பலர் விளையாடி வருகின்றனர். கைப்பும் இதே பாணியில் பப்ஜி கேம் மொபைலில் விளையாடி வந்துள்ளார்.

இரவு முழுவதும் தூங்காமல், ஹெட்போன் போட்டுக்கொண்டு தொடர்ந்து விளையாடியதை பார்த்து, அவரது பெற்றோர் அதிர்ந்து கைப்பை கண்டித்துள்ளனர்.

ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3:00 மணி அளவில், விளையாட்டில் ஏற்பட்ட அதீத பதற்றம் மற்றும் வெற்றி-தோல்விக்கு இடையிலான போராட்டத்தால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த கைப்பு, திடீரென நிலை தடுமாறி படுக்கையிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கைப்பை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இரத்த அழுத்தம் முன்னூற்றுக்கும் மேல் உயர்ந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற அதீத வேகம், ஆக்ரோஷம் மற்றும் தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் இல்லாத நிலையே இதற்கான காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அதீத இரத்த அழுத்தத்தின் விளைவாக அவரது மூளை நரம்பு வெடித்ததால், கைப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதே உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு, கொரியன் ஆன்லைன் கேமிற்கு அடிமையான மூன்று சகோதரிகள், அந்த விளையாட்டின் உளவியல் தாக்கத்தால் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சி மெல்ல மறைந்ததற்குள், தற்போது கைப் இறந்தது இந்தியாவையே அதிர வைத்துள்ளது.

கேமில் வெற்றி பெறும்போது சுரக்கும் டோபமைன் வேதி பொருள் இளைஞர்களை அதிக அடிமையாக்குவதற்கான காரணமாகவும், விளையாட்டின் போது ஏற்படும் அட்ரினலின் அதிகரிப்பு இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உயர்த்தி உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

. ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் இளைஞர்களின் மனநிலையை இந்த அளவிற்கு பாதிப்பதாகவும் இந்த சம்பவங்கள் சாட்சியமாகக் கூறுகின்றன.

தொழில் நுட்பம் மனித வசதிக்காக இருக்க வேண்டும், ஆனால் அதுவே உயிரை பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடாது. இந்தியாவில் அரசு சில கேம்களை தடை செய்திருந்தாலும், சட்ட விரோத வழிகளில் அவற்றை விளையாடி அதற்கு அடிமையாகியதால் கொடூரமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

எனவே பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் மொபைலில் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் முகமது கைப் போன்ற அகால மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அபாயம் உள்ளது.