Home இந்தியா வாடகை வீட்டில்தான் இருக்கிறீர்களா? ஏப்ரல் 1 முதல் சூப்பர் சலுகை!

வாடகை வீட்டில்தான் இருக்கிறீர்களா? ஏப்ரல் 1 முதல் சூப்பர் சலுகை!

வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்களுக்கும், குறிப்பாக ஐடி துறையில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கும் ஒரு மெகா ஜாக்பாட் அறிவிப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வதில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பழைய நடைமுறைகளை நீக்கி, புதிய விதிமுறைகளை கொண்டு வர வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் வீட்டு வாடகைப்படி (HRA) சலுகை தொடர்பான மாற்றமே. இதுவரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே 50% HRA வரிவிலக்கு வழங்கப்பட்டு வந்தது. மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு 40% மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால் இனி அந்த நிலை மாறவுள்ளது. புதிய வரைவு விதிகளின்படி பெங்களூர், ஹைதராபாத், புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களும் மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

இதனால் இந்த நகரங்களில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் இனி 50% HRA வரிச்சலுகையை பெற முடியும். பழைய வரிமுறையைத் தேர்வு செய்தவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

இதற்குப் பிறகும் ஒரு முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த 20–30 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்வி அலவன்ஸ் ₹100 ஆகவே இருந்தது. இன்றைய காலத்தில் ₹100க்கு எதையும் பெற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, மாதம் ₹100 ஆக இருந்த கல்வி அலவன்ஸை ₹3,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஹாஸ்டல் அலவன்ஸ் மாதம் ₹300 இலிருந்து ₹9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும்.

மேலும், மக்களை குழப்பமடையச் செய்த 500க்கும் மேற்பட்ட வருமான வரி விதிகள் வெறும் 33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. வருமான வரி படிவங்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.