
தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது எப்படி மூளையைச் சீரமைக்கிறது என்பதற்கான விடையை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா பல்கலைக்கழக (UCSF) ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு, பிப்ரவரி 18-ம் தேதி வெளியான ‘செல்’ (Cell) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மூளையின் பாதுகாப்பு கவசம்: பிளட்-பிரைன் பேரியர் (BBB)
நமது மூளையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மூளைக்குள் நுழையாமல் பாதுகாக்கிறது. ஆனால், வயது கூடும்போது இந்தப் பாதுகாப்பு கவசம் பலவீனமடைந்து ‘ஓட்டை’ (Leaky) ஆகிறது. இதனால் மூளையில் வீக்கம் (Inflammation) ஏற்பட்டு, ஞாபக மறதி மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் உருவாகின்றன.
கல்லீரலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு!
உடற்பயிற்சி செய்யும்போது நமது கல்லீரலில் இருந்து GPLD1 என்ற ஒரு என்சைம் சுரக்கிறது. இந்த என்சைம் ரத்தத்தின் வழியாக மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களுக்குச் சென்று, அங்கு தேங்கியுள்ள TNAP என்ற பாதிப்பை ஏற்படுத்தும் புரதத்தை நீக்குகிறது.
ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய தகவல்கள்:
- TNAP புரதம்: வயது முதிர்ந்த எலிகளின் மூளைக் கவசத்தில் இந்த புரதம் அதிகமாக இருந்தது. இதுவே மூளைச் சிதைவுக்குக் காரணமாகிறது.
- மாற்றம்: வயதான எலிகளுக்கு உடற்பயிற்சி மூலமோ அல்லது செயற்கையாகவோ TNAP புரதத்தைக் குறைத்தபோது, அவற்றின் ஞாபக சக்தி மீண்டும் அதிகரித்தது.
- முதுமையிலும் பலன்: 70 வயது மனிதர்களுக்கு இணையான வயது கொண்ட எலிகளிடமும் இந்தத் தொழில்நுட்பம் வேலை செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்சைமர் நோய்க்கு புதிய தீர்வு?
இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அல்சைமர் நோய்க்கான மருந்துகள் மூளையை மட்டுமே மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டன. ஆனால், கல்லீரலில் சுரக்கும் என்சைம் மூளையைப் பாதுகாக்கும் என்ற இந்தத் தகவல், புதிய வகை மருந்துகள் தயாரிக்க வழிவகுக்கும்.
“உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு, முதுமையால் ஏற்படும் மூளைச் சிதைவைப் புரிந்துகொள்ள மிக முக்கியமானது” என இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் சவுல் வில்லேடா (Saul Villeda) தெரிவித்துள்ளார்.







